50 சதவீத சுற்றுலா பயணிகளை அனுமதிக்க கோரி ஊட்டி, கொடைக்கானலில் வியாபாரிகள் போராட்டம்: ஓட்டல், வாகன உரிமையாளர்களும் பங்கேற்பு

சென்னை: ஊட்டி, கொடைக்கானலில் 50 சதவீத சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்க கோரி வியாபாரிகள், சுற்றுலா கார் ஓட்டுநர்கள், வியாபாரிகள் போராட்டம் நடத்தினர். தமிழகத்தில் கொரோனா 2வது அலையை கட்டுப்படுத்துவதற்காக, சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. கடந்தாண்டு கொரோனா ஊரடங்கில் சுற்றுலாப்பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால், சுற்றுலாத்தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டது. சுற்றுலாப்பயணிகள் வரத்தால், இயல்பு நிலை திரும்பும் சூழலில் மீண்டும் சுற்றுலாத்தலங்களை மூடும் உத்தரவால், ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இத்தொழிலை நம்பியுள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் அபாயம் உருவாகியுள்ளது.  

ஊட்டியில் மறியல்: ஆண்டுதோறும் கோடை சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் ஊட்டிக்கு அதிகளவு சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இச்சமயங்களில்தான் இவர்களுக்கு வியாபாரம் அதிகமாக நடக்கும். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதலே சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து இருந்தது. இன்று முதல் மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் ஊட்டி மட்டுமின்றி நீலகிரி மாவட்டத்திலுள்ள பல்வேறு சுற்றுலாத் தலங்களிலும் கடைகளை வைத்துள்ளவர்கள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா நுழைவாயில், நடைபாதை மற்றும் சாலையோரங்களில் கடைகள் வைத்துள்ளவர்கள் திடீரென தாவரவியல் பூங்கா நுழைவாயிலில் இருந்து சேரிங் கிராஸ் பகுதிக்கு நேற்று ஊர்வலமாக வந்தனர்.

அங்கு அவர்கள் ஊட்டி - கூடலூர் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். வியாபாரிகள் கூறுகையில், ‘‘சுற்றுலா பயணிகளை நம்பி சிறிய கடை முதல் பெரிய கடைகள் வரை அனைவரும் ஏராளமான சரக்குகளை வாங்கி வைத்துள்ளோம். இதனை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பல லட்சம் வரை வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படும். எனவே, 50 சதவீத சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும்’’ என்றனர். அவர்களுடன் ஊட்டி சப் கலெக்டர் மோனிகா ராஜே, டவுன் டிஎஸ்பி., மகேஸ்வரன், தாசில்தார் குப்புராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும், வியாபாரிகள் சமாதானம் அடையவில்லை. பூங்கா வியாபாரிகள் சேரிங் கிராஸ் பகுதியில் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். எனவே மாற்றுப்பாதையில் அனைத்து வாகனங்களும் செல்ல அனுமதிக்கப்பட்டன. சுற்றுலா கார் ஓட்டுநர்களும் ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.

கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம்: கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் சிறு வியாபாரிகள், டாக்ஸி ஓட்டுனர்கள், வழிகாட்டிகள், ஓட்டல் உரிமையாளர்கள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொடைக்கானல் ஏரி, கலையரங்கம் மற்றும் பிற சுற்றுலா தலங்களில் உள்ள சிறு கடைகள் நடத்தும் வியாபாரிகள் தங்களது கடைகளை அடைத்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ‘‘கொடைக்கானலுக்கு வழக்கம்போல் சுற்றுலாப்பயணிகளை அனுமதிக்க வேண்டும். இ-பாஸ் நடைமுறையை கூட பின்பற்றலாம்’’ என கோரி கோஷமிட்டனர். காலை 11 மணிக்கு துவங்கிய ஆர்ப்பாட்டம் பகல் 2 மணி வரை தொடர்ந்தது. கொடைக்கானல் ஆர்டிஓ சிவக்குமார், இதுபற்றி அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும், அதன்பேரில் முடிவு எடுக்கப்படும் என கூறினார். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: