தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 2,327 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு: பெற்றோர்கள் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 12 வயதுக்குட்பட்ட 2,327 குழந்தைகளுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டைவிட இந்த முறை குழந்தைகள் அதிகம் பேர் பாதிக்கப்படுகின்றனர். முதல் அலையில் வயதானவர்கள், ஆண்கள் தான் அதிகம் பாதிக்கப்பட்டனர். ஆனால் கொரோனாவின் இரண்டாவது அலையில் 12 வயது குழந்தைகளும் அதிகம் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர்.

சென்னையில் மட்டும் 9 வயதுக்குட்பட்ட 1.84% சதவீதம், 10-19 வயதுக்குள் 5.54% பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களில் 12 வயதுக்குட்பட்ட 2,327 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த 8ம் தேதி 132 குழந்தைகளும், 9ம் தேதி 161 குழந்தைகளுக்கும், 10ம் தேதி 183 பேரும், 11ம் தேதி 203 பேரும், 12ம் தேதி 250 பேரும், 13ம் தேதி 225 பேரும், 14ம் தேதி 288 பேர், 15ம் 256 பேர் பாதிக்கப்பட்டு இருந்தனர். அதாவது 15ம் தேதி மட்டும் கொஞ்சம் குறைவது போல் இருந்தது. ஆனால், அதற்கு மறுநாள் மீண்டும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியது. அதன்படி 16ம் தேதி 310 பேருக்கும், 17ம் தேதி 319 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகளுக்கு கொரோனா தொற்று பாதிக்க வாய்ப்பில்லை என்று கூறிய நிலையில் கடந்த 10 நாட்களில் மட்டும் 2,327 குழந்தைகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில், ‘‘கொரோனா தொற்றின் பாதிப்பு குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களை வெளியில் தேவையில்லாத இடங்களுக்கு அழைத்து செல்வதை தவிர்க்க வேண்டும். துரித உணவுகள் வாங்கி கொடுப்பதை தவிர்க்க வேண்டும்’’ என்றனர்.

* முதியோர் மற்றும் குழந்தைகள் அதிகளவில் பாதிப்பு

கடந்த 10 நாட்களில் 60 வயதுக்கும் மேற்பட்ட ஆண்கள் 6,458, பெண்கள் 4,225 பேர் என மொத்தம் 10,683 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோன்று 12 வயதுக்குட்பட்ட ஆண்கள் 1,258 பேர், பெண்கள் 1,069 பேர் என மொத்தம் 2,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories:

>