வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரமோற்சவம் துவக்கம்: பக்தர்களுக்கு கட்டுப்பாடுகள்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை மாத பிரமோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோயிலில் இந்தாண்டு சித்திரை மாத பிரமோற்சவ விழா இன்று காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் உற்சவர் வீரராகவ பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கோயிலில் உள்ள செல்வர் மண்டபத்தில்  பக்தர்களுக்கு காட்சி கொடுத்து அருள் பாலித்தார். பிரமோற்சவத்தின் 3ம் நாளான 20ம் தேதி காலை கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றார்.

9வது நாளான 26ம் தேதி தீர்த்தவாரி நடைபெற உள்ளது. ஆண்டுதோறும் விமரிசையாக நடைபெறும் சித்திரை பிரமோற்சவ விழா இந்தாண்டு கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘’ஆண்டுதோறும் சித்திரை பிரமோற்சவத்தின்போது வெவ்வேறு வாகனங்களில்  சுவாமி திருவீதியுலா புறப்பாடு நடைபெறும். இந்தாண்டு கொரோனா  தொற்று காரணமாக சுவாமி திருவீதி உலா புறப்பாடு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்தாண்டு வீரராகவ பெருமாள் நாள்தோறும் சிறப்பு அலங்காரத்தில் கோயிலில்உள்ள  யாகசாலை மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்.

கோயிலுக்கு வரும் பக்தர்கள், சமூக இடைவெளி, முக கவசம் அணிவது என்று கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும். விழாவின்போது குளத்தில் நீராட பக்தர்களுக்கு அனுமதி கிடையாது’’ என்று கோயில் கவுரவ ஏஜென்ட் சி.சி.சம்பத் கூறினார்.

Related Stories: