கொரோனா அதிகரிப்பால் பயணிகள் அச்சம்: தொலைதூர பஸ் சேவை குறைப்பு: அதிகாரி தகவல்

சென்னை: கொரோனா அச்சத்தால் நீண்ட தூரம் செல்லும் பேருந்து சேவையை மக்கள் தவிர்த்து வருகின்றனர். இதனால், நீண்ட தூர பேருந்து சேவை இயக்கம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் தமிழகத்தில் 9 ஆயிரத்தை கடந்துள்ளது. இனி வரும் நாட்களில் பாதிப்பு இரட்டிப்பாகும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி போன்ற ஊர்களில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு செல்லும் பயணிகளின் எண்ணிக்கை பாதிக்கு பாதியாக குறைந்துள்ளது.  வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்ததால் நீண்ட தூரம் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் பேருந்துகளின் சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரையில் இருந்து செல்லும் 60 சதவீதம் பேருந்துகள் வெறிச்சோடிய நிலையிலேயே வெளியூர்களுக்கு சென்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அரசு பேருந்தை தொடர்ந்து நீண்ட தூர தனியார் ஆம்னி பஸ்களின் சேவையும் குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் பல ஊர்களில் குளிர்சாதன வசதி கொண்ட பேருந்து சேவை இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.  பயணிகள் வருகை குறைவால் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பும் ஏற்பட்டது. இதனால், நீண்ட தூர பேருந்து சேவையை குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தற்போது சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு இயக்கப்படும் நீண்ட தூர பஸ்களில் 25 சதவீத பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும், இதே நிலை நீடிக்கும் பட்சத்தில் அடுத்தகட்டமாக என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவித்தார். இதை தொடர்ந்து, கொரோனா தாக்கம் குறைந்த பிறகு பயணிகள் வருகை அதிகரிக்கும். அப்போது,  அதற்கேற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: