உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைப்படி தமிழகத்தில் பூங்கா, மக்கள் கூடும் இடங்களுக்கு தடை? ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு

சென்னை: உயர் அதிகாரிகள், மருத்துவ நிபுணர்களுடன் தலைமை செயலாளர் ஆலோசனை நடத்தியுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க கூடுதலாக பூங்கா மற்றும் மக்கள் கூடும் இடங்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பு இன்று அல்லது நாளை வெளியிட வாய்ப்புள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனாவின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. அதன்படி தினசரி கொரோனா தொற்று பாதிப்பு 9 ஆயிரத்தை கடந்து வருகிறது. நேற்று மட்டும் தமிழகத்தில் 9,344 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 2,884 பேர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 807 பேர்  பாதிக்கப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை, தூத்துக்குடி, திருப்பூர், கோவை உள்ளிட்ட 20 மாவட்டங்களில் கொரோனா வேகமாக பரவி வருகிறது.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக சுகாதாரத்துறை திணறி வருகிறது. அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளில் படுக்கைகள் நிரம்பி வழிகிறது. மூச்சுத்திணறலுடன் வரும் நோயாளிகள் மட்டுமே உள்நோயாளிகளாக சேர்க்கப்படுகிறார்கள். காய்ச்சல், உடல்வலி, தலைவலி என ஆரம்ப கட்ட பாதிப்புடன் வரும் கொரோனா நோயாளிகள் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படாமல், மாத்திரை மருந்துகள் வழங்கி வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

2வது அலை கொரோனா முற்றிலும் வித்தியாசமாக உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகிறார்கள். அதிகளவு உடல்வலி, காய்ச்சல், தலைவலியால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் வீட்டில் இருக்க பயப்பட்டு, மருத்துவமனைக்கு செல்ல ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் அங்கு படுக்கை இல்லாததால் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவமனைக்கு சென்றால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

சென்னை உள்ளிட்ட சில நகர் பகுதிகளில் தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கைகள் இல்லை. கொரோனா வராமல் இருக்க தடுப்பூசி போடலாம் என்று அரசு மருத்துவமனைக்கு சென்றால் தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்பும் சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் நேற்று முன்தினம் சென்னை தலைமை செயலகத்தில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகள் தொடர்பாக பல்வேறு அரசு துறைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடந்தது. தொடர்ந்து, மருத்துவ நிபுணர்களின் கருத்துகளையும் கேட்டார். இந்த ஆலோசனையின்போது, தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக பூங்கா, சுற்றுலா தலங்களுக்கு மக்கள் செல்வதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. மே 5ம் தேதி முதல் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் தேர்வை தள்ளி வைக்கலாமா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கும்போது, பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், தொழிலதிபர்கள், தொழிலாளர்கள், அலுவலர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாத வகையில், அதே நேரம் கூட்டத்தை குறைக்கும் நடவடிக்கைகள் குறித்த அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளது.

இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அறிவித்தால் பலன் கிடைக்குமா என்பது குறித்தும் கருத்து கேட்கப்பட்டுள்ளது. வெளிமாநிலத்தில் இருந்து தமிழகம் வரும் அனைவருக்கும் இ-பாஸ் நடைமுறையை அறிவிப்பது உள்ளிட்ட புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட உள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இருந்து இன்று சென்னை வருகிறார். தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று முதல்வர் எடப்பாடி புதிய கட்டுப்பாடுகள் குறித்து இன்று அல்லது நாளை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: