தனியார் மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவர் கொரோனா தடுப்பு மருந்து: தமிழக மருத்துவ சேவை கழகம் திட்டம்

சென்னை: கொரோனா தடுப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்தை தனியார் மருத்துவமனைகளுக்கு சப்ளை செய்ய தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் முடிவு செய்துள்ளது. கொரோனா எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவர் மருந்து தற்போது நல்ல பலனை தருகிறது. இந்த மருந்துக்கு பல்வேறு மாநிலங்களில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தில் போதுமான மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், இந்த ரெம்டெசிவர் பற்றாக்குறை உள்ள 4 மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று மருந்து தயாரிப்பாளர்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் கூறும்போது, ‘‘தற்போது இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு உள்ளது. இங்கு எந்த பிரச்னையும் ஏற்படவில்லை.

மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழகத்திற்கு தரப்பட வேண்டிய ரெம்டெசிவர் மருந்துகளை வேறு மாநிலங்களுக்கு மாற்றிவிடக் கூடாது என்று தெரிவித்துள்ளேன். இந்த மருந்தை மிகக் குறைந்த விலையில் அதாவது ஜி.எஸ்டி வரியுடன் 699க்கு கொள்முதல் செய்கிறோம். மே மாதம் இன்னும் சில ஆயிரம் டோஸ் மருந்தை வாங்க முன்னதாகவே ஆர்டர் செய்துள்ளோம்’’ என்றார்.  இது தொடர்பாக தமிழ்நாடு மருத்துவ சேவை கழகத்தின் இயக்குநர் உமாநாத் கூறும்போது, ‘‘தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அனைத்திற்கும் தேவையான ரெம்டெசிவர் மருந்துகள் இருப்பில் உள்ளன. மருந்து தேவை ஏற்படும்பட்சத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த மருந்தை தருவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கடந்த 2 நாட்களுக்கு முன்பு 12 தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து தரப்பட்டுள்ளது. பல தனியார் மருத்துவமனைகள் இந்த மருந்தை இருப்பு வைப்பதில் பல சிரமங்களை சந்தித்து வருகிறார்கள்’’ என்றார்.

Related Stories: