மத்திய அரசு சேமிப்பு கிடங்கில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்: அதிகாரி மீது பரபரப்பு குற்றச்சாட்டு

தாம்பரம்: சிட்லபாக்கம் பேரூராட்சியில் மத்திய அரசுக்கு சொந்தமான 30 ஏக்கர் பரப்பளவு கொண்ட இடத்தில் 17 சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு சென்னை புறநகர் பகுதிகளுக்கு தேவையான ரேஷன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டு, மாதம்தோறும் சப்ளை செய்யப்பட்டு வருகிறது. மேலும், பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் இங்கிருந்து கடைகளுக்கு விநியோகம் செய்யபடுகிறது. அது மட்டுமின்றி, ராணுவ வீரர்களுக்கு வழங்கப்படும் வீட்டு உபயோக பொருட்களின் கிடங்கும் இங்கு உள்ளது. இந்த கிடங்குகளில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 150க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். கிடங்குக்கு வரும் பொருட்களை ஏற்றி, இறக்க குறைந்த பட்சமாக 3 முதல் 5 ரூபாய் வரை இவர்களுக்கு கூலி வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கிடங்கில் உள்ள இருப்புகளை ஏற்றி, இறக்க வெளியாட்களை பயன்படுத்த, கிடங்கு நிர்வாகம் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து அதிகாரிகளுடன் தொழிலாளர்கள் நேற்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த சிட்லபாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அவர்கள் முன்னிலையில், கிடங்கு நிர்வாகிகள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து, தொழிலாளர்கள் தங்களின் போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளனர்.   இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில், ‘கொரோனா காலகட்டத்தில் நாங்கள் உயிரை பணயம் வைத்து வேலை செய்து வருகிறோம். ஆனால் அதைப் பொருட்படுத்தாமல், எங்கள் வயிற்றில் அடிப்பது போல், கிடங்கு அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். கிடங்கை சேர்ந்த உயரதிகாரி ஒருவர், புதியதாக ஆட்களை நியமனம் செய்யாமல் இருக்க, எங்களிடம் லஞ்சம் எதிர்பார்க்கிறார்.

நாங்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். அதனால், எங்களை பழிவாங்கும் நோக்கத்தில், வெளியாட்களுக்கு, வேலை செய்ய அனுமதி வழங்கி, அடிக்கடி எங்கள் வாழ்வாதாரத்தை முடக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். எங்களுக்கு இந்த தொழிலை விட்டால், வேறு தொழில் தெரியாது. 150 குடும்பங்கள் இந்த தொழிலை நம்பித்தான் உள்ளது. எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, வெளியாட்களை இங்கு வேலை செய்ய அனுமதிக்காமல், ஏற்கனவே உள்ள தொழிலாளர்கள் தொடர்ந்து இதே இடத்தில் வேலை செய்ய அனுமதி அளிக்க வேண்டும். இல்லையென்றால், தொடர்ந்து போராட்டம் நடைபெறும்,’ என்றனர்.

Related Stories: