கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45லிருந்து 25 வயதாக குறைக்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு சோனியா காந்தி கடிதம்..!

டெல்லி: கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45லிருந்து 25 வயதாக குறைக்க வேண்டும் என சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார். கொரோனா முதல் அலையின் போது, உருமாற்ற வைரஸ் பற்றி எந்த அச்சுறுத்தலும் இல்லாமல் இருந்தது. கொரோனா வைரசை வைத்து பல நிறுவனங்கள் தடுப்பூசியை தயாரித்து பயன்பாட்டில் கொண்டு வந்துள்ளன. இந்நிலையில், கொரோனா 2வது அலை மிகத் தீவிரமாக உள்ளது. இந்தியாவில் தினசரி பாதிப்பு 2 லட்சத்தை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்ற நிலை உள்ளது. தினசரி பலி மீண்டும் ஆயிரத்தை தொட்டுள்ளது. இந்த அபாயகரமான சூழலில் நமக்குள்ள ஒரே பாதுகாப்பு தடுப்பூசி போட்டுக் கொள்வது மட்டுமே என்பது சமானியர்களின் நம்பிக்கையாக உள்ளது.

கொரோனா தடுப்பூசி போடும் பணிகளையும் மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில்; கொரோனா தடுப்பூசிக்கான வயது வரம்பை 45லிருந்து 25 வயதாக குறைக்க வேண்டும். ஊரடங்கை மீண்டும் அமல்படுத்துவதால் ஏழைகளை மட்டுமின்றி பொருளாதார நடவடிக்கைகளையும் பாதிக்கும். ஊரடங்கால் பாதிக்கப்படும் தகுதியான குடிமகன்களின் கணக்கில் மாதம் ரூபாய் 6 ஆயிரம் செலுத்த வேண்டும். மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருத்துவமனை படுக்கைகளின் கடுமையான பற்றாக்குறை பற்றிய செய்திகளைப் படிப்பது மிகவும் கவலை அளிக்கிறது.

தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். கொரோனா நெருக்கடியை கணித்தல், மதிப்பீடு மற்றும் நிர்வகிப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கேட்காமல், மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றனர். இந்த சவாலான காலங்களை அரசியல் எதிரிகளாகக் காட்டிலும் இந்தியர்களாக எடுத்துக் கொள்வது உண்மையான ராஜதர்மமாக இருக்கும் இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: