தலைமையிடமிருந்து வரவில்லை: ‘தேர்தலில் வெற்றி பெற்றதும் டோக்கனுக்கு பணம் தருகிறேன்’: அதிமுக வேட்பாளர் மாணிக்கம் எம்எல்ஏ பேச்சு வைரல்

வாடிப்பட்டி: மதுரை மாவட்டம், சோழவந்தான் தனி தொகுதியில் எம்.எல்.ஏ. மாணிக்கம் மீண்டும் அதிமுக வேட்பாளராக போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நேரத்தில் அதிமுகவினர் மூலம் வாக்காளர்களுக்கு இரட்டை இலை சின்னம் பொறிக்கப்பட்ட டோக்கன்கள் வழங்கியதாக தகவல்கள் வெளியாகின. டோக்கன் பெற்ற  வாக்காளர்கள் ஆங்காங்கே பணம் கேட்டு அதிமுக நிர்வாகிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அலங்காநல்லூர் அருகே அழகாபுரி கிராமத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர், சோழவந்தான் தொகுதி அதிமுக வேட்பாளர் மாணிக்கத்தை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.

அந்த ஆடியோவில், ‘‘டோக்கன்களை வாங்கியவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுக்கின்றனர். உடனே தொகையை வழங்க வேண்டும்’’ என கூறுகிறார். அதற்கு மாணிக்கம் எம்எல்ஏ, ‘‘தலைமையிடமிருந்து வர வேண்டியது இன்னும் வரவில்லை. வெற்றி பெற்றவுடன், தலைமையில் இருந்து வராவிட்டாலும், நானே  கொடுத்து விடுகிறேன்’’  என தெரிவிக்கிறார். மாணிக்கம் எம்எல்ஏ பேசிய இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே வாக்காளர்களுக்கு பணம் வழங்கியதாக திமுகவினர் கொடுத்த புகாரில், சோழவந்தான் காவல் நிலையத்தில் மாணிக்கம் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது, இந்த வெளிப்படையாக பேசியதன்மூலம் கடும் நடவடிக்கையை தேர்தல் ஆணையம் எடுக்கவேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories:

>