தமிழகத்தில் கொரோனா 2வது அலை வேகமாக பரவும் நிலையில் 11 மாவட்டத்தில் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு: ஸ்டாக் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படும் பொதுமக்கள்

* தமிழகத்தில் 3,864 அரசு 931 தனியார் தடுப்பூசி மையங்கள் உள்ளது.

* இதுவரை தமிழகத்தில் சுமார் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல அரசு தடுப்பூசி மையங்கள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டன.

* தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

சென்னை: தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் வேகமெடுத்துள்ள நிலையில், ஏராளமானவர்கள் தடுப்பூசி போட அரசு அமைத்துள்ள மையங்களுக்கு படையெடுத்து வருகின்றனர். ஆனால், 11 மாவட்டங்களில் தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி போட வரும் பொதுமக்களை ஸ்டாக் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்படுகின்றனர்.  நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா தொற்று வேகமாக பரவியது. இதையடுத்து, கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி இந்தியா முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் என இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி 16ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் தடுப்பூசி போட பலரும் தயக்கம் காட்டினர். காரணம், நாட்டின் முக்கிய தலைவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் முன்கள பணியாளர்களான டாக்டர்கள், செவிலியர்களுக்கு மட்டுமே தடுப்பூசி போட வலியுறுத்தப்பட்டது.

பின்னர் படிப்படியாக அனைவரும் போட்டுக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், தடுப்பூசி போட பெரும்பாலானோர் தயக்கம் காட்டினர். ஒரு தடுப்பூசி போட்டுக் கொண்ட 28 நாட்களில் 2வது தடுப்பூசி போட வேண்டும். அப்போதுதான் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் உருவாகும் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனாவின் 2வது அலை கடந்த மார்ச் மாதம் முதல் வேகம் எடுக்க ஆரம்பித்தது. தற்போது தினசரி பாதிப்பு 8,500ஐ தொட்டுள்ளது. இதனால் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அனைவருக்கும் தடுப்பூசி போட முடியாது என்பதால், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தடுப்பூசி போட்டுக் கொள்ளும்படி மத்திய, மாநில அரசுகள் உத்தரவிட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது 45 வயதுக்கு மேல் உள்ளவர்கள் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் தினசரி தடுப்பூசி போட்டுக்கொள்ள குவிந்து வருகிறார்கள்.

ஆனால் தமிழகத்தில் சென்னை, நெல்லை, திண்டுக்கல், திருப்பூர், விழுப்புரம், தேனி, தஞ்சாவூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தடுப்பூசி செலுத்த அரசு மருத்துவமனைக்கு படையெடுப்பவர்களை தடுப்பூசி இல்லை என்று கூறி செவிலியர்கள் திரும்பி அனுப்பும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில், வண்ணார்பேட்டை நகர்ப்புற சுகாதார நிலையத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் முகாம் அமைத்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலை 30 பேருக்கு தடுப்பூசி போடுவதற்காக காலை 9 மணிக்கே வந்து பதிவு செய்த பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால், கலெக்டர் அலுவலக ஊழியர்கள் 10 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்படும். அவர்களும் ஏற்கனவே பதிவு செய்திருப்பதால் மற்றவர்களுக்கு தடுப்பூசி இல்லை என்றனர். இதனால் ஆவேசம் அடைந்த நெல்லை டவுனை சேர்ந்த சுப்பிரமணியன் மனைவி சிதம்பரவள்ளி (47) அங்கிருந்த பணியாளர்களுடன் வாக்குவாதம் செய்தார். தடுப்பூசி போட பதிவு செய்து விட்டு இப்போது இல்லை என்று கூறினால் எப்படி என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுதார். தடுப்பூசி போடவில்லை என்றால் தீக்குளித்து விடுவேன் என ஆவேசமாக பேசினார். இந்த சலசலப்பால் தடுப்பூசி போடும் பணி சிறிது நேரம் நிறுத்தப்பட்டது.

இதையடுத்து, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் டாக்டர் வரதராஜன் மற்றும் அதிகாரிகள் வந்து 30 பேருக்கும் தடுப்பூசி போடுமாறு அறிவுறுத்தினர். கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு போடுவதற்கு தனியாக 10 டோஸ் அனுப்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. அதேபோன்று பாளையங்கோட்டை பெருமாள்புரத்தில் நேற்று 20 பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டது. அதன்பின்னர் வந்தவர்களை கொரோனா தடுப்பூசி இல்லை என்று திருப்பி அனுப்பிவிட்டனர். நெல்லை மீனாட்சிபுரத்திலும் இதே நிலையே நீடித்தது. சேலம் மாவட்டத்தில் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள், மினி கிளினிக், தனியார் மருத்துவமனைகள் என 281 இடங்களில் தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. ஆனால், தடுப்பூசி போட மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சேலம் மாநகரம் மற்றும் மாவட்ட பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில், தடுப்பூசி இல்லை.

இதனால் தடுப்பூசி போட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இதற்கிடையே முதற்கட்ட தடுப்பூசி போட்டவர்கள் 2வது டோஸ் போடுவதற்கு அழைக்கப்பட்டு இருந்தனர். ஆனால், அவர்களுக்கும் தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அதிகாரிகள் செய்வதறியாது திணறினர். அதேநேரம், தனியார் மருத்துவமனைகளில் தட்டுப்பாடு இல்லாமல் 250க்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதனால் பலர் தனியார் மருத்துவமனைகளுக்கு படையெடுத்து வருகிறார்கள். சேலம் குமாரசாமிபட்டியில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்திற்கு நேற்று 40க்கும் மேற்பட்ட மக்கள் வந்தனர். ஆனால், தடுப்பூசி போதிய இருப்பு இல்லை, எனவே திங்கட்கிழமைக்கு மேல் வாருங்கள் எனக்கூறி திருப்பி அனுப்பினர். இதனால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

இதேபோல கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாமக்கல் மாவட்டங்களிலும் சுகாதார மையங்களில் தடுப்பூசி மருந்து தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. நேற்று திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கூட்டுறவு துறை அதிகாரிகள் 396 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்ற ஊழியர்களுக்கு ஊசி தட்டுப்பாடு ஏற்பட்ட காரணத்தினால் அனைவரும் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதேபோல், திருப்பத்தூர் சாமி செட்டி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த முகாமில், 150 பேர் பதிவு செய்திருந்தனர். அதில் 12 மணியளவில் வந்த நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் 50 பேருக்கு மட்டுமே கொரோனா தடுப்பூசி உள்ளது எனக்கூறி 50 பேருக்கு மட்டும் கொரோனா தடுப்பூசி செலுத்தினர். இதனால் காலை 8 மணியில் இருந்து தடுப்பூசி போடுவதற்காக காத்திருந்த பொதுமக்களிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் தற்போது தடுப்பூசி இருப்பு இல்லை என்றும், இன்னும் 2 நாட்கள் கழித்துதான் நமது மாவட்டத்திற்கு வரும். உங்களுடைய தொலைபேசி எண்களை தாருங்கள் அதை வைத்து நாங்கள் உங்களை அழைத்து கொரோனா தடுப்பூசி செலுத்துகிறோம் என்று தெரிவித்தனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் காலை முதல் நாங்கள் பதிவு செய்து விட்டு காத்துக் கொண்டிருக்கிறோம். தற்போது மதியம் 2 மணிக்கு மேல் ஊசி இல்லை என்று கூறுவது என்ன நியாயம் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வாக்குவாதம் செய்தனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி ஸ்டாக் இல்லாததால் நேற்று தடுப்பூசி போட வந்தவர்களை திருப்பி அனுப்பினர். பழனி அரசு மருத்துவமனையில் திடீரென அதிகம்பேர் தடுப்பூசிபோட குவிந்தனர். அங்கும் தடுப்பூசி இல்லாததால் திரும்பி செல்லும் நிலை உள்ளது. கொரோனா 2வது அலை வேகமாக பரவி வருவதால், பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறினர்.

இதேபோன்று, திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி இல்லாமல் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போட்டால் நல்லது என்று நம்பிக்கையில்தான் வந்தோம். கோடிக்கணக்கில் செலவு செய்து தடுப்பூசி போட வலியுறுத்தி விளம்பரம் செய்யப்படுகிறது. ஒரு ஊசி போட்டால் மறு ஊசி போட மருந்து இல்லாமல் போனால் என்ன ஆகும்? பிளாக்கில் தனியாருக்கு தடுப்பூசி விற்கப்படுகிறதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றனர். தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூரில் உள்ள அரசு மருத்துவமனையில்200 பேருக்கு டோக்கன் வழங்கப்பட்டது. காலை 8 மணிக்கு வந்து காத்திருந்த 50 டோக்கன் மட்டுமே ஊசி போடப்பட்டது. மற்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

மதுரை மாவட்டத்தில் 40க்கும் அதிக மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், பல்வேறு அரசு மருத்துவமனை மையங்களில் குறைந்தளவே மருந்து வந்ததால், தடுப்பூசி போடத்துவங்கி 2 மணி நேரத்திற்குள் தீர்ந்து போனது. திருமங்கலம் அரசு மருத்துவமனையில் நேற்று 46 பேருக்கு தடுப்பூசி போட்டதும் தடுப்பூசி மருந்து தீர்ந்து விட்டது. இதனால் நண்பகல் 12 மணிக்கு மேல் வந்த பொதுமக்கள், அனைவரையும் தடுப்பூசி மருந்து இல்லை என்று திருப்பி அனுப்பி வைத்தனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் நேற்று காலை முதல் மதியம் 3 மணி வரை பலரும் காத்திருந்தனர். 3 மணிக்கு திடீரென தடுப்பூசி ஸ்டாக் இல்லை என்று கூறி திருப்பி அனுப்பப்பட்டனர். இப்படி தமிழகம் முழுவதும் கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசிக்கு 11 மாவட்டங்களுக்கு மேல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் செய்வதறியாது திகைத்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்திற்கு கூடுதலாக 20 லட்சம் தடுப்பூசிகளை அனுப்பி வைக்க வேண்டும் என்று தமிழக பொது சுகாதார இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் ஆணையருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழகத்தில் தற்போது 3,864 அரசு தடுப்பூசி மையங்களிலும், 931 தனியார் தடுப்பூசி மையங்களிலும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இதுவரை தமிழகத்தில் சுமார் 45 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மத்திய அரசு தமிழகத்திற்கு இதுவரை 47,03,590 கோவிஷீல்டு தடுப்பூசியும், 7,82,130 கோவாக்சின் தடுப்பூசிகளும் வழங்கி உள்ளது. தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக பல அரசு தடுப்பூசி மையங்கள் கடந்த சில நாட்களாக மூடப்பட்டு விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் முதல் தடுப்பூசி போட்ட 28 நாளில் 2வது தடுப்பூசி போட முடியாமல் பொதுமக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள்.

Related Stories: