கொரோனா 2வது அலை எதிரொலி: வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோயில் மூடல் பிரம்மோற்சவம் ரத்து-பக்தர்கள் அதிர்ச்சி

வேலூர்: தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் உட்பட அனைத்தும் மூடப்பட்டுள்ள நிலையில் 2வது ஆண்டாக பிரம்மோற்சவ விழாவுக்கு தடை ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலையின் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மத்திய அரசின் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள வரலாற்று சின்னங்கள், அருங்காட்சியங்கள் உட்பட அனைத்தும் இன்று முதல் மூட  மத்திய அரசு உத்தரவிட்டது. அதன்படி வேலூர் கோட்டை மற்றும் ஜலகண்டேஸ்வரர் கோயில், அருங்காட்சியகம் உட்பட அனைத்தும் மூடப்பட்டது.

அதேபோல் பழைய மசூதி, மேல்பாடி சோமநாதீஸ்வரர் கோயில் ஆகியவையும் மூடப்பட்டதாக கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார். இதையடுத்து வேலூர் கோட்டையின் நுழைவு வாயில் கதவு மூடப்பட்டது. மேலும் காந்தி சிலை  அருகே பேரிகார்டுகள் அமைத்து தடுப்பு வேலி போடப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் கோட்டையின் உள்ளே செல்ல முடியாத வகையில் அங்கு தொல்லியல் துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த தடை காரணமாக வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த பிரம்மோற்சவ விழா 2வது ஆண்டாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இவ்விழா நடத்த ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில் கிராம தேவதை  உற்சவம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டு நேற்று கணபதி பூஜையும் நடந்தது. இன்று கொடியேற்ற உற்சவம் நடத்தவிருந்த நிலையில் மத்திய தொல்லியல்துறையின் அதிரடி உத்தரவு காரணமாக பிரம்மோற்சவ விழா ரத்து செய்யப்பட்டது.  இதனால் இன்று முன்கூட்டியே ஏற்பாடு செய்த நிலையில் பிரம்மோற்சவம் ரத்தானதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.  மேலும் பக்தர்கள் செல்லவும் தடைவிதிக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்பட்டுள்ளது. இருப்பினும் ஆறு கால  பூஜைகளும் நடத்தப்படுகிறது. இதற்காக அர்ச்சகர்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் கோட்டை வளாகத்தில் நடைபயிற்சி செல்ல முற்றிலும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: