சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீட்டிப்பு: சென்னை ஐகோர்ட் உத்தரவு..!

சென்னை: சூரப்பா மீதான விசாரணை ஆணைய அறிக்கை மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்ற இடைக்கால உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை இடைக்கால உத்தரவை நீட்டித்து உயர்நீதிமன்ற நீதிபதி கோவிந்தராஜ் ஆணை பிறப்பித்துள்ளார்.  2018 ஆம் ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட சூரப்பா, கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி ஓய்வு பெற்றார். அவர் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து சர்ச்சை ஆரம்பித்தது. தமிழகத்தில் பலர் இருக்கையில் கர்நாடகத்தை சேர்ந்த சூரப்பாவை நியமித்தது ஏன்? என்ற கேள்வி வெகுவாக எழுந்தது.

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவதில் சூரப்பா தன்னிச்சையாக செயல்பட்டது இந்த சர்ச்சைக்கு தூபம் போட்டது போல ஆயிற்று. மாணவர் சேர்க்கை, இட ஒதுக்கீடு மறுப்பு உள்ளிட்ட பிரபல விவகாரங்களில் சூரப்பாவுக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் வெடித்தது. அதுமட்டுமில்லாமல், சூரப்பா ரூ.248 கோடி ஊழல் செய்வதாகவும் புகார் எழுந்தது. அந்தப் புகாரின் பேரில், சூரப்பாவுக்கு எதிரான விசாரணை நடத்த கலையரசன் குழுவை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டது. கலையரசன் குழு விசாரணை நடத்தி வருகிறது.

இதனிடையே, சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கலையரசன் தலைமையிலான ஆணையம் செல்லத்தக்கதல்ல. அரியர் ஆல்பாஸுக்கு ஒத்துக் கொள்ளாததால் என்னை பதவி நீக்க விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெற்று விட்டதால் ஆணையம் தன்னை விசாரிக்க முடியாது என சூரப்பா வாதிட்டார். இதைக் கேட்டுக் கொண்ட நீதிபதிகள், அண்ணா பல்கலை.யின் முன்னாள் துணைவேந்தர் சூரப்பா மீது நடவடிக்கை எடுக்க விதித்த தடையை நீட்டித்து உத்தரவிட்டனர்.

Related Stories:

>