சித்திரை முதல் நாளான இன்று சார்பதிவாளர் அலுவலகங்கள் செயல்பட அனுமதி: தமிழக அரசு உத்தரவு

* 22 ஆயிரம்  ஆவணங்கள் பதிவாக வாய்ப்பு

* சார் பதிவாளர்கள் காலை 9 மணிக்கே பணிக்கு வர அறிவுரை

சென்னை: மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் எனவும், அன்றைய தினம் பதிவு செய்யும் ஆவணங்களுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்கள் உள்ளது. இந்த அலுவலகங்களில் விளைநிலம், வீடு உள்ளிட்ட சொத்து பரிமாற்றங்கள் பதிவு செய்யப்படுகிறது. வார நாள் முழுவதும் அலுவலகங்கள் அலுவலகங்கள் செயல்பட்டாலும், மக்கள் பெரும்பாலும் மங்களகரமான நாட்களிலேயே பத்திரம் பதிவு செய்வதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அதிகபட்சமாக பத்திரங்கள் பதிவாவது வழக்கமான நடைமுறையாக உள்ளது. இந்த நிலையில், இன்று சித்திரை முதல் நாள் என்பதால் பொதுமக்கள் பலரும் பத்திரப்பதிவு செய்ய விரும்புவர்.

ஆனால் விடுமுறை தினம் என்பதால் சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. இந்தநிலையில் பத்திரப்பதிவுத்துறையின் வருவாயை பெருக்கும் நோக்கில் பதிவுத்துறை ஐஜி சங்கர் சார்பில் மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்பட அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தார். இதை ஏற்று தமிழக அரசு சார்பில்  சித்திரை முதல் நாளை ஒட்டி பதிவுத்துறை அலுவலகம் செயல்படும் என்ற பதிவுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் அறிவித்துள்ளார்.   இதுகுறித்து பதிவுத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் பதிவுத் துறை ஐஜி சங்கருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: சித்திரை முதல் தேதி(இன்று), ஆடிப்பெருக்கு(3.8.2021) மற்றும் தைப்பூசம்(18.01.2022) ஆகிய மங்களகரமான  நாட்கள் அரசு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்த மங்களகரமான நாட்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், பொதுமக்கள் தங்களுடைய சொத்து பரிமாற்றம் குறித்த ஆவணங்களை பதிவு செய்ய ஏதுவாக இருக்கும். அத்தகைய தினங்களில் பதிவு அலுவலகங்களை செயல்பாட்டில் வைத்தால், இந்த விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவண பதிவுகளுக்கு பதிவு சட்டத்தின் கீழ் கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் அனுமதிக்குமாறு கோரப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தங்கள் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ததில் இந்த மங்களகரமான நாட்களில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பத்திரப்பதிவு அலுவலகங்களும் செயல்பாட்டில் வைக்கலாம். அத்தகைய விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு பதிவுச் சட்டத்தின் படி கூடுதல் கட்டணம் வசூலிக்கவும் பதிவுத்துறை அலுவலகங்களுக்கு தமிழக அரசு அனுமதி வழங்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று 22000 ஆவணங்கள் வரை பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதால் காலை 9 மணிக்கே பதிவு அலுவலர்கள் அலுவலகங்களுக்கு வர உத்தரவிடப்பட்டுள்ளது மேலும் அதிகமான பத்திரங்கள் பதிவு அலுவலகங்களில் கூடுதலாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டு அவர்கள் பத்திரம் பதிவு செய்யவும் பதிவுத் துறை ஐஜி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: