கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை இல்லை: அனைத்து மாநிலங்களுக்கும் இதுவரை 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன: மத்திய சுகாதாரச் செயலர் பேட்டி

டெல்லி: இதுவரை அனைத்து மாநிலங்களுக்கும் 13.10 கோடி தடுப்பூசி மருந்துகள் வழங்கப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த மத்திய சுகாதாரச் செயலர் ராஜேஷ் பூஷன், மாநிலங்களுக்கு தேவைக்கேற்ப தடுப்பூசி மருந்துகள் வழங்கப்படுகின்றன; தடுப்பூசிக்கு தட்டுப்பாடு இல்லை. நாடு முழுவதும் இன்று காலை 8 மணி வரை 10.85 கோடி பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 40 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கும் வகையில் உள்ளது என்றார்.

மேலும், இதுவரை நாங்கள் 13,10,90,000 டோஸ் மாநிலங்களுக்கும் யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கியுள்ளோம். மாநில அரசுகள் சரியான திட்டமிடுதலுடன் தடுப்பூசியை பயன்படுத்தினால் பற்றாக்குறை இருக்காது. மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் 1.67 கோடி தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.கொரோனா தடுப்பூசி போடுவதில் வீணடிக்காத மாநிலமாக கேரள அரசு திகழ்கிறது. இதர மாநிலங்கள் 8 முதல் 9 சதவீதம் வரை தடுப்பூசியை வீணடிக்கின்றன. ஏப்ரல் மாத இறுதிக்குள் 2 கோடியே 1 லட்சத்து 22,960 டோஸ் தடுப்பூசிகள் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்பட்டு விடும் என்றும் தெரிவித்தார்.  

தடுப்பூசி போட்டுக்கொண்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு 85% குறைகிறது. தடுப்பூசி போட்டுக் கொண்டால் தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவதுடன் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.உத்தரபிரதேசத்தில், ஒரு நாளைக்கு சராசரியாக 89 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒரு நாளைக்கு 10,000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சராசரி தினசரி ஆர்டி-பி.சி.ஆர் சோதனைகள் சுமார் 45 முதல் 44% வரை உள்ளன, எனவே அவை அதிகரிக்கப்பட வேண்டும் என்றார்.

Related Stories:

>