ஆம்பூரில் தூக்கமின்றி தவிக்கும் மக்கள் ஒற்றை யானை 4வது நாளாக அட்டகாசம்-வாழை, நெற்பயிர்கள் துவம்சம்

ஆம்பூர் : ஆம்பூரில் 4வது நாளாக அட்டகாசம் செய்த ஒற்றை யானை வாழை, நெல் உள்ளிட்ட பயிர்களை சேதப்படுத்தியது. இதனால் பீதியடைந்த மக்கள் தூக்கமின்றி தவிக்கின்றனர்.திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அடுத்த பொன்னப்பல்லிக்கு கடந்த 4 நாட்களுக்கு முன் யானை ஒன்று வந்தது. இந்த யானை அங்குள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதப்படுத்தியது. பின்னர் துருகம், ஊட்டல் காப்புக்காடு வழியாக ஆம்பூர் வன சரகத்திற்குட்பட்ட வேலூர் மாவட்ட பகுதியான பாலூர், ஓணாங்குட்டை ஆகிய இடங்களில் முகாமிட்டது. அங்குள்ள நெற்பயிர், வாழைமரங்களை சேதப்படுத்தியது.

தொடர்ந்து, ஆம்பூர் வனச்சரகர் மூர்த்தி தலைமையிலான குழுவினர் அங்கு ஆய்வு செய்து யானை மீண்டும் விவசாய நிலங்களில் வராத வண்ணம் கண்காணித்து வந்தனர். இருப்பினும் யானையை விரட்ட முடியாமல் வனத்துறையினர் மற்றும் கிராம மக்கள் சிரமமடைந்தனர்.

3 நாட்களாக வனப்பகுதிக்கும், கிராம பகுதிக்கும் மாறிமாறி உலா வந்த யானை, தொடர்ந்து 4வது நாளாக நேற்று முன்தினம் இரவு பாலூர், கொத்தூர், மாச்சம்பட்டு, ஓணாங்குட்டை வழியாக பேரணாம்பட்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிக்குள் நுழைந்தது. இதனால் கிராம மக்கள் நிம்மதியடைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மீண்டும் வந்த வழியாகவே ரெட்டிக்கிணறு பகுதிக்கு யானை திரும்பியது. தொடர்ந்து வனப்பகுதியையொட்டி உள்ள விவசாய நிலங்களில்  புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

இதனால் அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனை விரட்டும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ‘கடந்த 3 நாட்களாக போக்கு காட்டி வந்த யானை, நேற்று முன்தினம் இரவு பேரணாம்பட்டு காப்புக்காடு பகுதிக்கு சென்றது. இதனால் நாங்கள் சற்று நிம்மதியடைந்திருந்ேதாம். ஆனால் சென்ற வேகத்திலேயே யானை மீண்டும் திரும்பிவிட்டது.

பேரணாம்பட்டு காப்புக்காடு பகுதியில் வறட்சி நிலவுவதால், அங்கு உணவு கிடைக்காததால் மீண்டும் யானை திரும்பியுள்ளது. வந்த வேகத்தில் ரெட்டிக்கிணறு பகுதியில் உள்ள வாழை, சப்போட்டா, நெற்பயிர் மற்றும் மாந்தோப்பு உள்ளிட்டவற்றை மீண்டும் சேதப்படுத்த தொடங்கிவிட்டது. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணவேண்டும். எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும்’ என வேதனையுடன் தெரிவித்தனர்.

Related Stories: