முழு ஊரடங்கு விதிக்கப்படும் என்ற பீதியால் சொந்த ஊருக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் :மகாராஷ்டிரா ரயில் நிலையங்களில் அலைமோதும் கூட்டம்

மும்பை: கொரோனா வேகமாக பரவி வருவதைத் தொடர்ந்து முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற பீதியில் வெளிமாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக தங்கள் சொந்த ஊரை நோக்கி புறப்படுகின்றனர். இதனால் மகாராஷ்டிராவில் பல ரயில் நிலையங்களில் தினமும் கூட்டம் அலைமோதுகிறது. கொரோனா 2வது அலை தீவிரமாகி உள்ளது. நாட்டிலேயே அதிகமாக மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்று தீயாய் பரவி வருகிறது. இதனால் அங்கு இரவு ஊரடங்கு, வார இறுதி நாட்கள் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. விரைவில் 14 நாள் முழு ஊரடங்கு விதிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகின்றன. இதே போல, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் என கிட்டத்தட்ட பெரும்பாலான மாநிலங்களில் பகுதி நேர கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எனவே, வெளிமாநில தொழிலாளர்கள் நிலை மீண்டும் கவலைக்கிடமாகி உள்ளது. கொரோனா முதல் அலையின் போது, திடீரென தேசிய ஊரடங்கு விதிக்கப்பட்டதால் வெளிமாநில தொழிலாளர் குடும்பம் குடும்பமாக சாலை வழியாக நடந்தே சொந்த ஊருக்கு சொந்த வேண்டிய அவலத்திற்கு தள்ளப்பட்டனர். இந்த முறை இதுபோன்று அவதிப்படக் கூடாது என்பதால் இப்போதே முன்னெச்சரிக்கையாக பல மாநிலங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கி விட்டனர். குறிப்பாக, மகாராஷ்டிராவில் இருந்து தினமும் குடும்பம் குடும்பமாக வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு பயணப்படுகின்றனர். இதன் காரணமாக வர்த்தக நகரமான மும்பையின் அனைத்து ரயில் நிலையங்களிலும்ம் பயணிகள் கூட்டம் அலைமோதுகிறது. சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டுமென போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தியும், கட்டுக்கடங்காத கூட்டத்தில் முழுமையாக கட்டுப்பாடுகளை அமல்படுத்த முடியாத நிலை நிலவுகிறது. மும்பை குர்லா பகுதியின் லோக்மானியா திலக் ரயில் நிலையில் நேற்று நீண்ட வரிசையில் வெளிமாநில தொழிலாளர்கள் ரயிலுக்காக காத்திருந்தனர்.

 

விவேக் தாகூர் என்பவர் கூறுகையில், ‘‘நான் 2வது முறையாக எனது சொந்த மாநிலமாக உத்தரப்பிரதேசத்திற்கு திரும்பிச் செல்கிறேன். பாந்த்ரா குர்லா பகுதியில் உள்ள ஓட்டலில் பணியாற்றினேன். இப்போது ஓட்டல் மூடப்பட்டுள்ளது. எனவே விவசாயத்தில் எனது குடும்பத்திற்கு உதவ சொந்த ஊருக்கே செல்கிறேன்’’ என்றார். ரயில்களில் டிக்கெட் கிடைப்பதும் குதிரைக் கொம்பாக இருப்பதாக பலர் கூறுகின்றனர். டிக்கெட் இருந்தால் மட்டுமே ரயில் நிலையத்திற்கு நுழைய முடியும் என்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதே போல மத்தியபிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பல தொழிலாளர்கள் பீகார், உபி போன்ற சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக கர்நாடகாவில் தற்போதே தொழிலாளர்களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

பொதுத் தேர்வு ஒத்திவைப்பு

மகாராஷ்டிராவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.  மாணவர்களின் உடல் நலனுக்கே முன்னிரிமை என தெரிவித்துள்ள மகாராஷ்டிரா அரசு, மே மாத இறுதியில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வும், ஜூன் மாதத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளது. வரும் நாட்களில்  கொரோனா சூழல் மேம்படுவதை பொறுத்து தேர்வு நடைபெறும்  சரியான தேதி பின்னர் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: