அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நோயாளிகள் எண்ணிக்கை 46 ஆயிரத்தை கடந்தது: சென்னை உட்பட 16 மாவட்டங்களில் தொற்று அதிகரிப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 6,711 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதன்படி, மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 46,308 ஆக உள்ளது. தமிழகத்தில் மார்ச் மாதம் முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கில் உயர்ந்து வருகிறது. மார்ச் 6ம் தேதி 500ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு தற்போது 7 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சென்னை, கோவை, செங்கல்பட்டு, கடலூர், காஞ்சிபுரம், திருச்சி, மதுரையில் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அந்தவகையில், தமிழகத்தில் நேற்று 6,711 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதுகுறித்து மாநில சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 82,982 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 6,711 பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதனால் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 46,308 ஆக உயர்ந்துள்ளது. 9,40,145 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 2,339 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதன் மொத்த எண்ணிக்கை 8,80,910 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெற்று வந்த 19 பேர் நேற்று உயிரிழந்தனர். மொத்தமாக இதுவரையில் 12,927 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னை உட்பட 16 மாவட்டங்களில் தொற்று பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, நேற்று அதிகபட்சமாக சென்னையில் 2,105 பேர், செங்கல்பட்டில் 611 பேர், கோவையில் 604 பேர், கடலூரில் 157 பேர், ஈரோடு 117 பேர், காஞ்சிபுரம் 277 பேர், கிருஷ்ணகிரி 119 பேர், மதுரை 219 பேர், நாகப்பட்டினம் 125 பேர், சேலம் 158 பேர், தஞ்சாவூர் 127 பேர், திருவள்ளூர் 333 பேர், திருவண்ணாமலை 111 பேர், தூத்துக்குடி 138 பேர், திருப்பூர் 160 பேர், திருச்சி 184 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் நேற்று 8 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: