வக்கீல் காமராஜ் கொலை வழக்கை 3 மாதத்தில் விசாரிக்க வேண்டும்: மதுரை முதன்மை நீதிமன்றத்துக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

சென்னை: வக்கீல் காமராஜ் கொலை வழக்கு விசாரணையை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில்மலையின் மருமகனும் வக்கீலுமான காமராஜ் கடந்த 2014ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். சென்னை ரெட்டேரி அருகே உள்ள அடுக்குமாடி குடியுருப்பில் நடைபெற்ற இந்த கொலை வழக்கில் கல்பனா, கார்த்திக், ஆனந்த் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க உத்தரவிடக்கோரி வக்கீல் காமராஜின் சகோதரி மேரி தேன்மொழி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு நீதிபதி ஹேமலதா முன்பு விசாரணைக்கு வந்தபோது, மொத்தமுள்ள 34 சாட்சிகளில் இதுவரை 18 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணையை 3 மாதத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட முதன்மை நீதிமன்றத்துக்கு நீதிபதி ஹேமலதா உத்தரவிட்டார்.

Related Stories: