18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள மகனை விடுவிக்க கோரி தாய் வழக்கு: உள்துறை செயலர் பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிறையில் 18 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள மகனை விடுவிக்கக் கோரி, தாய் தொடர்ந்த வழக்கில் உள்துறை செயலர் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. பூந்தல்லியை சேர்ந்த கோவிந்தம்மாள், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: என் மகன் பிரகாஷ் (41) கடந்த 1997ல் நடந்த கொலையில் நந்தம்பாக்கம் போலீசால் கைது செய்யப்பட்டார். வழக்கை விசாரித்த செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் கடந்த 2003ல் ஆயுள் தண்டனை விதித்தது. இதை 2005ல் சென்னை உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. தற்போது மதுரை மத்திய சிறையில் உள்ளார். 18 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளார். சிறையில் உள்ள காலகட்டத்தில், எலக்ட்ரிக்கல் வயரிங், தச்சர், டிடிபி, பிபிஏ, எம்பிஏ, எம்காம் உள்ளிட்ட படிப்புகளை முடித்து பட்டம் பெற்றுள்ளார்.

கடந்த 2002ல் எனது ஒரு சிறுநீரகத்தை தம்பிக்கு தானமாக வழங்கினேன். தற்போது எனது சிறுநீரகம் பாதித்துள்ளது. தொடர் சிகிச்சையில் உள்ளேன். அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டுமென டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். என்னை உடன் இருந்து ஒருவர் கவனிக்க வேண்டியுள்ளது. என் மகன் 18 ஆண்டுகள் 5 மாதமாக சிறையில் உள்ளார். எனவே, என் மகனை முன்கூட்டியே விடுவிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் ஆகியோர் விசாரித்தனர்.

வக்கீல் யாஸ்மின் பேகம் ஆஜராகி, ‘‘ஆயுள் சிறைவாசிகளில் 10 ஆண்டுகள் பூர்த்தி செய்த நன்னடத்தை உள்ளவர்களை முன்கூட்டியே விடுதலை செய்யலாம். மனுதாரரை ஒருவர் உடன் இருந்து கவனிக்க வேண்டியுள்ளது’’ என்றார். அரசு வக்கீல் ஆனந்தராஜ் ஆஜராகி, ‘‘மனுதாரரின் கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. அதன் மீது உரிய உத்தரவிடப்படும்’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் சட்டத்தின்படி மனுதாரரின் கோரிக்கையை உள்துறை (சிறைகள்) செயலர் 8 வாரத்திற்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: