கலை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி கோரி தமிழகம் முழுவதும் கிராமிய கலைஞர்கள் போராட்டம்: கலெக்டர்களிடம் மனு

சென்னை: கொரோனா பரவல் எதிரொலியாக திருவிழா உள்ளிட்ட மத வழிபாட்டு விழாக்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. கிராமப்புறங்களில் திருவிழாக்கள் நடத்த அனுமதிக்க வேண்டும். கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் நாடகம், கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்க வேண்டுமென கோஷமிட்டபடி தமிழகம் முழுவதும் கிராமிய கலைஞர்கள் நேற்று போராட்டம் நடத்தி மாவட்ட கலெக்டர்களிடம் மனு அளித்தனர். மதுரையில், தமிழ்நாடு நாடக நடிகர்கள் சங்கம் சார்பில் 100க்கும் மேற்பட்டோர் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று திரண்டனர். பின்னர் நிர்வாகிகள் கலெக்டர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

கிராமிய நாட்டுப்புற தெம்மாங்கு இசைக்கலைஞர்கள் நலச்சங்கம் சார்பில், நடிகர்கள் போல வேடம் அணிந்தும், மேளதாளம் முழங்கியபடியும், பொய்க்கால் குதிரை உள்ளிட்ட கிராமிய நடனங்கள், சுவாமி வேடங்களில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டரிடம், ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும் மாதம் தோறும் ரூ.10 ஆயிரம் நிதி வழங்கும்படி கோரி மனு அளித்தனர். இதேபோல நெல்லை, தூத்துக்குடி, நாமக்கல் கலெக்டர் அலுவலகத்துக்கும் கிராமிய கலைஞர்கள் நடன நிகழ்ச்சிகளை நடத்தியபடியே வந்து கலெக்டர்களிடம் மனு அளித்தனர்.

75 பேர் இழுத்து சென்று கைது: மதுரையில் உலகப்புகழ் பெற்ற சித்திரை திருவிழா உள்ளிட்ட அனைத்து திருவிழாக்களையும் நடத்தக்கோரி கிராமிய நாட்டுப்புற கலைஞர்கள், சிறு குறு வியாபாரிகள், பந்தல் அமைப்பாளர்கள், கைவினை கலைஞர்கள், மதுரை வாழ் மக்கள் உள்ளிட்ட 150 பேர் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் அருகே நேற்று திரண்டனர். சிலர் தீச்சட்டி ஏந்தியும், மேளதாளத்துடன், சங்கு ஊதியவாறும் தமுக்கம் தமிழன்னை சிலையை நோக்கி ஊர்வலமாக வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆங்காங்கே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். போலீசார் கலைந்து செல்லும்படி கூறியபோது, பெண்கள் வாக்குவாதம் செய்தனர். திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 10 பெண்கள் உள்ளிட்ட 75 பேரை போலீசார் இழுத்து சென்று கைது செய்தனர்.

Related Stories: