இந்தியாவில் யானைகள் எண்ணிக்கை குறைய காரணம் என்ன?.. தடையை மீறி யானைகளை விற்கும் மாஃபியாக்கள்: ஆர்டிஓ மூலம் அம்பலம்

சென்னை: இந்தியாவில் உள்ள 2,675 வளர்ப்பு யானைகளில் 723 யானைகளுக்கு உரிமையாளர் யார் என்றே தெரியவில்லை என்பது ஆர்டிஐ மூலம் அம்பலமாகியுள்ளது. காதுகளில் மைக்ரோ சிப் பொறுத்தப்படாத அந்த யானைகளை எந்த ஒரு இடத்திற்கும் மிக எளிதாக கடத்திச் சென்று பெரும் தொகைக்கு விற்பனை செய்யும் மாபியாக்கள் குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. 20-ம் நூற்றாண்டு தொடக்கத்தில் இந்திய காடுகளில் சுமார் 50,000 யானைகள் இருந்ததாக தெரிவிக்கிறது புள்ளி விவரம். வேட்டையாடுதல், மின் வேலியில், ரயில் மோதி பலியாதல் போன்ற காரணங்களால் யானைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 2017-ம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி நாடு முழுவதும் 27, 312 யானைகள் இருப்பது உறுதியானது.

அவற்றில் மிக அதிகமாக கர்நாடகாவில் 6,049, அசாமில் 5,719, கேரளாவில் 5,706, தமிழ்நாட்டில் 2,761, ஒடிசாவில் 1,976, உத்தரகாண்டில் 1,839, மேகாலயாவில் 1,754, அருணாச்சல பிரதேசத்தில் 1,614, யானைகள் இருப்பது தெரிய வந்தது. காடுகளில் பிடிக்கப்பட்ட யானைகளை சிலர் சட்ட விரோதமாக கடத்தி விற்பனை செய்வதாக புகார் எழுந்தது. அதன் பேரில் வளர்ப்பு யானை பட்டியல் அவற்றுக்கான உரிமையாளர் யார் என்ற விவரங்களை சென்னையில் உள்ள யானை ஆர்வலர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு பெற்றுள்ளனர். அதன்படி நாடு முழுவதும் 2,675 யானைகள் தனி நபர்கள் அல்லது அமைப்புகளின் கட்டுப்பாடில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவற்றில் 1,251 யானைகளுக்கு உரிமையாளர் சான்று வழங்கப்பட்டுள்ளது.

723 யானைகளுக்கு இன்னும் சான்று வழங்கப்படாததால் அவற்றின் உரிமையாளர் யார் என்றே தெரியவில்லை.  651 யானைகள் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. 86 யானைகள் வன உயிரின பூங்கா மற்றும் மறுவாழ்வு மையங்களில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. 1,678 யானைகள் தனிநபர் வசம் உள்ளன. 96 யானைகள் வழிபாட்டு தளங்களிலும், 47 யானைகள் சர்க்கஸிலும் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உரிமையாளர் சான்று பெறப்படாத யானைகளை மிக எளிதாக ஒரு இடத்தில் இருந்து மற்றோரு இடத்திற்கு கடத்தி சென்று விற்பனை செய்ய முடியும். இதற்கென தான மாஃபி கும்பல்கள் செயல்படுகின்றன. முறையாக உரிமம் பெறாத காதுகளில் மைக்ரோ சிம் பொறுத்தப்பட்டிருக்காது. அதனால் அவற்றின் இடம் பெயர்வை கண்டுபிடிக்க முடியாது.

இது முறைகேடுகளுக்கு வசதியாக அமைந்துவிடுவதாக யானை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். யானைகள் விற்பனை செய்வதை சட்டம் தடுக்கிறது. அவற்றை நன்கொடையாக மட்டுமே கொடுக்கவும், வாங்கவும் முடியும் ஆனால் யானை மாபியாக்கள் தானம் கொடுப்பது போன்றே போலி ஆவணங்களை தயாரித்து விற்பனையை அரங்கேற்றுகின்றனர். யானைகளின் உயரம் மற்றும் வயதுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. 10 முதல் 15 வயது யானைகள் தலா 45,00,000 ரூபாய் வரை விலை போகிறதாம். நல்ல உயரமான கேரள யானைகளுக்கு 2 முதல் 2.5 கோடி வரை விலை நிர்ணயிக்கின்றன. வளர்ப்பு யானைகளை முறையாக கண்காணிக்க தவறுவதே முறைகேடுகளுக்கு காரணம். எனவே அதில் மத்திய மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று யானை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: