மெரினா கடற்கரை மூடல் தடையை மீறி நடைபயிற்சிக்கு மக்கள் குவிந்ததால் பரபரப்பு: போலீசாரிடம் கடும் வாக்குவாதம்

சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மெரினா கடற்கரையில் நேற்று அதிகாலையிலேயே பொதுமக்கள் நடைபயிற்சிக்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனைவரையும் தடுத்து திருப்பி அனுப்பியதால் போலீசாருடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பொது இடங்களுக்கு செல்லும் மக்களுக்கு தமிழகம் அரசு கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அந்த வகையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளுக்கு வார இறுதி நாட்களில் பொதுமக்கள் வர சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. அந்த தடை உத்தரவை நடைமுறைப்படுத்தும் வகையில் நேற்று அதிகாலை 4 மணி முதல் மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட்நகர் கடற்கரை தடுப்புகள் அமைத்து மூடப்பட்டது.

நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் சென்னை மாநகராட்சியின் தடை உத்தரவை மீறி மெரினா கடற்கரை பகுதிக்கு பொதுமக்கள் அதிகாலை 4 மணி முதல் வழக்கம் போல் நடைபயிற்சியில் ஈடுபட வந்தனர். அவர்களை போலீசார் கலங்கரை விளக்கம் முதல் உழைப்பாளர் சிலை வரை உள்ள மெரினா கடற்கரை நுழைவாயில் பகுதிகளிலேயே தடுத்து, கொரோனா தடுப்பு காரணமாக யாரும் நடைபயிற்சி மற்றும் உடற்பயிற்சி செய்ய கடற்கரை பகுதியில் அனுமதி கிடையாது என்று கூறினர். ஆனால் பொதுமக்கள் போலீசாரின் பேச்சை கேட்காமல் தடையை மீறி நடைபயிற்சியில் ஈடுபட முயன்றனர். இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் போலீசார் தடையை மீறி பொதுமக்கள் யாரேனும் நடைபயிற்சியில் ஈடுபட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். அதைதொடர்ந்து பொதுமக்கள் கடற்கரை பகுதியில் இருந்து கலைந்து சென்றனர். பொதுமக்கள் யாரும் தடையை மீறி உள்ளே வராத வகையில் மெரினா கடற்கரை பகுதி முழுவதும் குதிரைப்படையினர் மற்றும் ஆயுதப்படை போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். பின்னர் மெரினா கடற்கரை பொதுமக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

மெரினா கடற்கரையில் சிறு கடை வியாபாரிகளுக்கும் கடைகளை திறக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் சிறு கடை வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அதேபோல் முகக்கவசம் அணியாமல் மெரினா கடற்கரைக்கு வந்த பொதுமக்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் ₹200 அபராதம் விதித்தனர். நடைபயிற்சிக்கு போலீசார் தடை விதித்ததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் காமராஜர் சாலையில் நடைபயிற்சியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் மெரினா பகுதியில் நேற்று அதிகாலை பரபரப்பு நிலவியது.

Related Stories: