மேலூர் அருகே வெள்ளரி கண்மாயில் மீன்பிடி திருவிழா: கெழுத்தி, கெண்டை, அயிரையை அள்ளிச் சென்றனர்

மேலூர்:  மேலூர் அருகே வெள்ளரி கண்மாயில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பொதுமக்கள் கெழுத்தி, கெண்டை, அயிரை மீன்களை அள்ளிச் சென்றனர். மதுரை மாவட்டம், மேலூர் அருகே வெள்ளரிப்பட்டி கிராமத்தில் வெள்ளரி கண்மாய் உள்ளது. இந்தாண்டு பெரியாற்றுக் கால்வாய் மூலம் இக்கண்மாயில் நீர் நிரப்பப்பட்டது. இப்பகுதியில் விவசாயப் பணிகள் முடிந்த நிலையில், நேற்று மீன்பிடி திருவிழா நடக்கும் என கிராமம் முழுவதும் அறிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் கண்மாயைச் சுற்றி மக்கள் திரண்டு,  கரையில் படுத்து உறங்கினர். நள்ளிரவு 12 மணியளவில் சிலர் கண்மாய்க்குள் திடீரென இறங்கி மீன்களை பிடிக்க ஆரம்பித்தனர். இதை தொடர்ந்து பலரும் இரவிலேயே மீன் பிடிக்க துவங்கினர்.

இதனால் அதிகாலையில் வந்தவர்கள் செடிகளுக்கு இடையில் சிக்கியிருந்த மீன்களை பிடித்தனர். கெழுத்தி, கெண்டை, அயிரை என பல வகையான மீன்கள் சிக்கின. சிறிய மீன்கள் முதல் 2 கிலோ மீன்களும் சிக்கின. கடந்த ஆண்டை விட மிகக் குறைவாக மீன்கள் கிடைத்ததாக கிராம மக்கள் தெரிவித்தனர். சிலர் மீன் கிடைக்காமல் திரும்பிச் சென்றனர். மீன் பிடிக்க வந்தவர்கள் சமூக இடைவெளி, முகக்கவசம் அணியாததால் கொரோனா பரவல் அச்சம் ஏற்பட்டது.

Related Stories: