உர விலையை உயர்த்தி விவசாயி வயிற்றில் அடிப்பதா? மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்

சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவின் முன்னணி உரம் உற்பத்தி நிறுவனமான இப்கோ டை அமோனியம் பாஸ்பேட் (டிஏபி) உரத்தின் விலையை 58.33 விழுக்காடு, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உள்ளிட்ட உரங்களின் விலையை 51.9 விழுக்காடு அளவுக்கு அதிகரித்து இருக்கிறது.

உரத் தயாரிப்பில் மூலப் பொருளாக இருக்கும் பாஸ்பரிக் ஆசிட் விலை, பன்னாட்டுச் சந்தையில் உயர்ந்ததால், டிஏபி, காம்ப்ளக்ஸ் உள்ளிட்ட உரங்களின் விலை உயர்ந்து வருவதாக இப்கோ நிறுவனம் கூறி இருக்கிறது. ஆனால் அதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை. மத்திய பாஜ அரசு உரத்திற்கு அளித்து வந்த மானியத்தை குறைத்துவிட்டதால்தான், உரம் விலையை உற்பத்தி நிறுவனங்கள் 60 விழுக்காடு வரை உயர்த்தி விட்டன. இது வன்மையான கண்டனத்துக்கு உரியது. உடனடியாக டிஏபி, காம்ப்ளக்ஸ் மற்றும் பொட்டாஷ் உரங்களின் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும். சென்னையில் இந்திய தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அறிவுசார் சொதுரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உள்பட 9 முக்கிய தீர்ப்பாயங்களை அவசர சட்டத்தின் மூலமாக கலைத்து விட்ட மத்திய பாஜ அரசு, அதற்கு குடியரசு தலைவரின் ஒப்புதலையும் பெற்று விட்டது.

இந்த மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களில் நிலுவையில் இருக்கும் வழக்குகளை இனி அந்தந்த மாநிலங்களில் உள்ள உயர் நீதிமன்றங்களே விசாரிக்கும் என்று மத்திய அரசு தெரிவித்து இருக்கிறது. இதனால் உயர் நீதிமன்றத்தில் குவிந்து கிடக்கும் லட்சக்கணக்கான வழக்குகளால் மேல்முறையீட்டு தீர்ப்பாய வழக்குகள் மேலும் பல ஆண்டுகளுக்கு விசாரணைக்காகக் காத்திருக்கும் அவலநிலை உருவாகும். எனவே, மத்திய அரசு பிறப்பித்துள்ள மேல்முறையீட்டு தீர்ப்பாயங்களைக் கலைக்கும் அவசர சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், சென்னையில் வாஜ்பாய் அரசால் திறக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் தலைமையகம் தொடர்ந்து இயங்கிட அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: