பாரத் உயர் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தில் புதுமை கண்டுபிடிப்பு தின நிகழ்ச்சி

சென்னை: பாரத் உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், மாணவர்களின் கண்டுபிடிப்பு திறனை ஊக்குவித்து தொழில் முனைவோர்களாக மேம்படுத்தும் வகையில் புதுமை கண்டுபிடிப்பு தின விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு நிறுவன தலைவர் ஜெ.சந்தீப் ஆனந்த் முன்னிலை வகித்தார். கூடுதல் பதிவாளர் ஹரி பிரகாஷ் வரவேற்றார். துணை வேந்தர் (பொறுப்பு) விஜய பாஸ்கர் ராஜூ ஆண்டறிக்கை வாசித்தார். இணை வேந்தர் சுந்தரராஜன் கல்வி நிறுவனத்தின் படைப்புகள், காப்புரிமைகள், தரம் குறித்து விளக்கினார். பதிவாளர் பூமிநாதன் படிப்பு வாரியாக மாணவர்கள் பெற்ற விருதுகளை பட்டியலிட்டார்.

பப்புவா நியூ கினியா நாட்டின் அமைச்சர் சசிந்திரன் முத்துவேல் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு கல்வி நிறுவனம் சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தொடர்ந்து பாரத் கல்வி நிறுவனத்தில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும், பாரத் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையின் புதிய ஐசியு பிரிவையும் திறந்து வைத்து, சசிந்திரன் பேசுகையில், “தொழில்முனைவோரை எங்கள் நாட்டுக்கு வரவேற்கிறேன். நீங்கள் அங்கு வந்து தொழிற்சாலைகளை தொடங்க ஏராளமான இயற்கை வளங்கள் உள்ளன” என்றார். பாரத் கல்வி நிறுவனத்தின் கண்டுபிடிப்பு மற்றும் மேம்படுத்தும் மையத்துக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது.

Related Stories: