சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை செலுத்திக்கொண்டார் முதல்வர் பழனிசாமி.!!!

சேலம்: கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செலுத்திக்கொண்டார். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்க கொரோனா தடுப்பூசி போட்டு வருகிறார்கள். ஆரம்பத்தில் தடுப்பூசிக்கு போதிய வரவேற்பு  இல்லை. இருப்பினும், கொரோனா 2வது அலை உருவாகியுள்ளதால் தற்போது மக்களிடம் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவமனைகளில் இலவசமாகவும், தனியார் மருத்துவமனைகளில் குறைந்த கட்டணத்திலும்  தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த மார்ச் 11-ம் தேதி காலை 11 மணிக்கு சென்னை, ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சென்று கொரோனா தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். அவருக்கு, அரசு  மருத்துவமனை செவிலியர் கோவாக்சின் தடுப்பூசி போட்டார். இந்நிலையில், சேலம் மாவட்டம் மோகன் குமாரமங்கலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று முதல்வர் பழனிசாமி கொரோனா தடுப்பூசியின் 2வது டோஸை செலுத்திக்கொண்டார்.  அரசு மருத்துவமனை செவிலியர் கோவாக்சின் தடுப்பூசி போட்டார்.

தொடர்ந்து, மருத்துவமனைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் பழனிசாமி, தமிழகம் முழுவதும் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தடுப்பூசி போதுமான அளவில் இருப்பு உள்ளது. தமிழ்நாட்டில் நாள்தோறும் 85,000 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 34.87 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சை மருந்துகள், உபகரணங்கள் போதிய அளவில் உள்ளது. அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டுகோள் விடுத்தார்.

Related Stories: