வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படும்; கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும்: சென்னை மாநகராட்சி ஆணையர் பேட்டி

சென்னை: கொரோனா தடுப்பு விதிகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. தினசரி பாதிப்பு 4,500ஐ நெருங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் 1,500ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து தமிழக தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் நேற்று முன்தினம் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பிரதமர் மோடியும் தமிழக தலைமை செயலாளருடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து, தமிழக அரசு நேற்று அதிரடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி திருவிழா, மதம் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு நாளை முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் நின்று கொண்டு பயணம் செய்யக்கூடாது, திரையரங்குகளில் 50 சதவீதம் இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி, கோயம்பேடு மார்க்கெட்டில் சில்லரை வியாபாரத்துக்கு தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புகள் அனைத்தும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; வீடு வீடாக சென்று உடல் வெப்பநிலை உள்ளிட்ட அறிகுறிகள் குறித்து நேரடி ஆய்வு நடத்தப்படும். நாளை முதல் கண்காணிப்பு குழுக்கள் வீடு வீடாக சென்று ஆய்வு செய்யும். வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தும் பணியில் 6 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

ஒருவர் தலா 250 வீடுகள் வீதம் ஆய்வு மேற்கொள்வர். 3 மாதங்களில் சென்னையில் 1.15 லட்சம் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு உள்ளன. தெரு வாரியாக எத்தனை பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்று கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. ஒரு மாதத்தில் 10 மடங்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் மக்கள் அரசின் கட்டுப்பாடுகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக 45 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். சென்னையில் 2 தெருக்களுக்கு ஒரு தடுப்பூசி முலாம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் சிறப்பு முகாம் நடத்தப்பட்டு தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.

3 பேருக்கு தொற்று இருந்தால் கட்டுப்பாட்டு பகுதி என ஸ்டிக்கரும், 6 பேர் இருந்தால் பேனரும் வைக்கப்படும். 10 பேருக்கு மேல் தொற்று இருந்தால் அப்பகுதியில் வருகை பதிவேடு உடன் போலீஸ் கண்காணிக்கப்படும். கொரோனாவை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை தேவை என்பதால் அபராதம் விதிக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

Related Stories: