அதிரடியாக இலக்கை விரட்டும் அமேசான்!: இந்தியாவில் 2025ம் ஆண்டிற்குள் 7 லட்சம் வேலை வாய்ப்புகளை கடந்துவிடுவோம் என உறுதி..!!

டெல்லி: இந்தியாவில் கடந்த ஓராண்டில் 3 லட்சம் வேலை வாய்ப்புகளை உருவாக்கி உள்ளதாக கூறியுள்ள அமேசான் நிறுவனம் வரும் 2025ம் ஆண்டிற்குள் 7 லட்சம் வேலை வாய்ப்பு என்ற இலக்கை கடந்துவிடுவோம் என தெரிவித்துள்ளது. 2020 ஜனவரியில் இந்தியா வந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் பல்வேறு இலக்குகளை நிர்ணயித்து சென்றார். 2025ம் ஆண்டுக்குள் அமேசானின் ஏற்றுமதி மதிப்பு 74 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என்று அவர் கூறியிருந்தார். அதன்படி கடந்த ஓராண்டில் இந்தியாவில் இருந்து 22 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதேபோல் ஒரு கோடி சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் டிஜிட்டல் மயம் ஆக்கப்படும் என்ற இலக்கில் 25 லட்சம் என்ற மைல் கல்லை அந்த நிறுவனம் எட்டியுள்ளது.

2025ம் ஆண்டுக்குள் 7 லட்சம் வேலை வாய்ப்புகள் என்ற இலக்கில் மூன்றில் ஒரு பகுதியான 3 லட்சம் வேலைவாய்ப்புகள் ஓராண்டிற்குள் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலை ஊரடங்கின் போது ஆன்லைன் ஷாப்பிங் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே இதற்கு காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஓராண்டில் சிறு நகரங்களில் இருந்து மட்டும் 85 சதவீத வாடிக்கையாளர்கள் அமேசானை நாடி 55 சதவீத ஆர்டர்களை கொடுத்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் 60 சதவீத பிரைம் வாடிக்கையாளர்கள் சிறு நகரங்களை சேர்ந்தவர்களே என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கொரோனா 2வது அலையில் தங்களது இலக்கு மேலும் உயர வாய்ப்புள்ளதாகவும் அமேசான் தெரிவித்துள்ளது.

Related Stories: