11 மாதங்களுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு: ஒரேநாளில் 19 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில் நேற்று 4,276 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் 1,520 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 19 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுவரை சிகிச்சை பலனின்றி 12,840 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் 500க்குள் இருந்த பாதிப்பு அடுத்த வாரம் ஆயிரத்தை நெருங்கியது.

அதன்பிறகு பிப்ரவரி மாத இறுதியில் 1,500 பேர் வரை பாதிக்கப்பட்டனர். ஆனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்நிலையில் மார்ச் மாதத்தில் 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 1ம் தேதி 2,817 பேர் பாதிக்கப்பட்டனர். ஏப்ரல் 2ம் தேதி முதல் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த வருடம் மே மாதம் முதல் வாரத்தில் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா, அதேபோல் நேற்று மீண்டும் 4 ஆயிரத்தை கடந்தது கொரோனா பாதிப்பு.

இதுகுறித்து, நேற்று சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 85,281 சோதனைகள் செய்யப்பட்டது. இதில் 4,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 9,15,386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 1,869 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 8,72,415 பேர் குணமடைந்துள்ளனர். இதையடுத்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,131 ஆக உள்ளது. சிகிச்சை பெற்று வந்தவர்களில் தனியார் மருத்துவமனையில் 8 பேர், அரசு மருத்துவமனையில் 11 பேர் என நேற்று மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,840 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னைக்கு அடுத்து எந்த மாவட்டங்கள்?

சென்னைக்கு அடுத்தபடியாக 10 மாவட்டங்களில் கொரொனா தொற்று அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று சென்னையில் 1,520 பேரும், செங்கல்பட்டில் 398 பேரும், காஞ்சிபுரத்தில் 107 பேரும், திருவள்ளூரில் 199 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கோயம்புத்தூரில் 427 பேர், மதுரையில் 115 பேர், நாகப்பட்டினத்தில் 118 பேர், சேலத்தில் 103 பேர், தஞ்சாவூரில் 125 பேர், திருப்பூரில் 154 பேர், திருச்சியில் 131 பேர் என மொத்தம் 11 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.

Related Stories: