சென்னை பல்கலை 163வது பட்டமளிப்பு விழாவில் அரியர் மாணவர்கள் 10 ஆயிரம் பேருக்கும் பட்டம்: தேர்வு நடத்த வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்புக்கு பின் வழங்கியதால் பரபரப்பு

சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், 10 ஆயிரம் அரியர் மாணவர்களுக்கும் சென்னைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நேற்று பட்டங்கள் வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் 163வது பட்டமளிப்பு விழா பல்கலை நூற்றாண்டு விழாக் கலையரங்கில் நேற்று நடந்தது. பல்கலை வேந்தரும், தமிழக ஆளுநருமான பன்வாரிலால் புரோகித் விழாவுக்கு தலைமை தாங்கி, பல்கலைக்கழக மாணவ, மாணவியருக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1 லட்சத்து 37 ஆயிரத்து 745 பேர் பட்டம் பெறுகின்றனர். அதில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் துறைகள், இணைப்பு கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவியர் 1 லட்சத்து 24 ஆயிரத்து 862 பேரும், தொலைநிலைக் கல்வி நிறுவனத்தின் மூலம் படித்தவர்கள் 12 ஆயிரத்து 11 பேரும் பட்டம் பெறுகின்றனர். மேலும், நேரடியாக பட்டம் பெற்றவர்கள் 872 பேர். இவர்களில் டிலிட் 3, பிஎச்டி 683, சிறப்பிடம் பெற்றவர்கள் 86, பரிசுகள் பெற்றவர்கள் 100 அடங்குவர்.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த விழாவில், 1.73 லட்சம் மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. அதில், கொரோனா காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில் வீட்டில் இருந்தே படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது. ஆனால், தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்து இருந்தது. இந்நிலையில், நீதி மன்றத்திலும் இதுகுறித்து யுஜிசி, ஏஐசிடிஇ ஆகியவை வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் தேர்வுக் கட்டணம் செலுத்திய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அரசு அறிவித்ததை ஏற்க முடியாது. அதனால் அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் நேற்று தெரிவித்தது.

நீதி மன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போதே, அதன் முடிவுகள் வெளியாகாத நிலையில், சென்னைப் பல்கலைக்கழகம் தனது 163வது பட்டமளிப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தது. இருப்பினும் நேற்று முன்தினம் சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை வெளியிட்டது. தீர்ப்பு வெளியான பிறகும், நேற்றைய பட்டமளிப்பு விழாவில் 10 ஆயிரம் அரியர் மாணவர்களுக்கு சென்னைப் பல்கலைக்கழகம் பட்டங்களை வழங்கியுள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழக துணை வேந்தர் கவுரியிடம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்துவிட்டார். தேர்வுக் கட்டுப்பாட்டு துறையின் அதிகாரிகள் கூறும்போது, அரியர் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளதால் அவர்களுக்கு தேர்வு நடத்துவது குறித்து பல்கலைக்கழகம் ஆலோசித்து வருகிறது என்று தெரிவித்தனர். இருப்பினும் அரியர் மாணவர்கள் நேற்று பட்டங்களை பெற்றுவிட்டனர். முன்னதாக, பட்டமளிப்பு விழாவில் சென்னை ஐஐடியின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், ‘‘உயர் கல்வியில் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவது கல்வி நிறுவனங்களின் அத்தியாவசிய பணியாக உள்ளது. அப்போதுதான் கல்வித்தரத்தில் உள்ள சவால்களை எதிர்கொள்ள முடியும்’’ என்றார்.

* சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் நேற்று மொத்தம் 1 லட்சத்து 37ஆயிரத்து 745 பேர் பட்டம் பெற்றனர்.

* கொரோனா காலத்தில் கல்லூரிகள் மூடப்பட்ட நிலையில், வீட்டில் இருந்தே படித்த மாணவர்கள் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது.

* தேர்வு நடத்த வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்து இருந்தது.

Related Stories: