39.36 கோடி இழப்பீடு வழங்காததால் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்த நீதிமன்ற ஊழியர்கள்

விழுப்புரம்: நிலம் வழங்கியதற்கு ரூ.39.36 கோடி இழப்பீடு வழங்காததால், ஆட்சியர் அலுவலகத்தை ஜப்தி செய்ய நீதிமன்ற ஊழியர்கள் சென்றனர். விழுப்புரத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ சண்முகத்துக்கு சொந்தமான 6 ஏக்கர் 75 சென்ட் இடத்தை கடந்த 1991ம் ஆண்டு, அரசு நிலஆர்ஜிதம் செய்து, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்துக்கு வழங்கியது. இதில், அவரது மகன் சிவானந்தத்தின் பங்கான 1 ஏக்கர் 50 சென்ட் இடத்துக்கு சதுர அடிக்கு 8 ரூபாய் 10 பைசா என கணக்கிட்டு ரூ.4,55,332 வழங்கியது. இந்த தொகை சந்தை மதிப்பைவிட குறைவாக இருப்பதாகக்கூறி, விழுப்புரம் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் சிவானந்தம் வழக்கு தொடர்ந்தார்.  

வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த 2018ம் ஆண்டு இழப்பீட்டுத் தொகையாக ரூ.39,36,59,337 வழங்கிட வேண்டுமென உத்தரவிட்டார். இந்த உத்தரவைபின்பற்றாததால் நேற்று நீதிமன்ற ஊழியர்கள் ஆட்சியர் அலுவலகத்தில் பொருட்களை ஜப்திசெய்ய வந்தனர். உடனடியாக, அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி, இழப்பீட்டுத் தொகை வழங்க சில நாட்கள் அவகாசம் கேட்டனர். இதற்கு, மனுதாரரும் ஒப்புக்கொண்டதால், ஜப்தி நடவடிக்கையை கைவிட்டுச்சென்றனர்.

Related Stories: