தேர்தலுக்கு பயன்படுத்தப்படாத வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் வந்த 5 கன்டெய்னர் லாரிகள் சிறைபிடிப்பு: தூத்துக்குடி வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் போராட்டம்

தூத்துக்குடி: தூத்துக்குடி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உரிய ஆவணங்கள் இன்றி பயன்படுத்தாத வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு வந்த 5 கன்டெய்னர் லாரிகளை திமுகவினர் சிறைபிடித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தூத்துக்குடி, திருச்செந்தூர், கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், வைகுண்டம் ஆகிய 6 தொகுதிகளில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்திய மின்னணு இயந்திரங்கள் அந்தந்த வாக்குசாவடிகளிலிருந்து நேற்று முன்தினம் இரவு முதல் வாக்கு எண்ணிக்கை மையமான தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டு பாதுகாப்பாக வைக்கும் பணி நடந்தது. அப்போது எந்தவிதமான ஆவணங்களும் இன்றி 5 கன்டெய்னர் லாரிகள் அடுத்தடுத்து வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்தன. இதைக்கண்ட திமுகவினர், கன்டெய்னர் லாரிகளை சிறைபிடித்து இது குறித்து கேள்வி எழுப்பினர்.  

ஆனால், அதற்கு முறையான காரணங்கள் தெரிவிக்கப்படாமல் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்கள் கன்டெய்னரில் இருப்பதாகவும், கூடுதலான வாக்குப்பதிவு இயந்திரங்கள் எனவும் வெவ்வேறு காரணங்கள் தெரிவிக்கப்பட்டதால் சந்தேகமடைந்த திமுக பகுதி செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஜெயகுமார், நகர மருத்துவர் அணி அருண்குமார், வக்கீல் சுபேந்திரன் உள்ளிட்டவர்கள் அந்த லாரிகளை சிறைபிடித்து ெதாடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரி செந்தில்ராஜை தொடர்பு கொண்டு திமுகவினர் தகவல் தெரிவித்தனர்.  இதில் 5 லாரிகளில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் வாக்குசாவடிகளில் பழுதான இயந்திரங்களுக்கு மாற்றாக கொண்டு வரப்பட்டது என்றும், வாக்குப்பதிவு மையங்களில் பழுதான வாக்குப்பதிவு இயந்திரங்களும் அந்த லாரிகளில் கொண்டு வரப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.  

அவற்றை ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த குடோனுக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திமுகவினர் கலைந்து சென்றனர். கன்டெய்னர் லாரிகளில் பயன்படுத்தப்படாத வாக்குபதிவு இயந்திரங்கள் கொண்டு வரப்பட்ட சம்பவத்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: