உத்தரகாண்ட்டில் கட்டுப்படுத்த முடியாமல் பரவுகிறது மேலும் 75 இடங்களில் காட்டுத்தீ 106 ஹெக்டேர் வனப்பகுதி நாசம்: ஹெலிகாப்டர்கள் மூலம் அணைக்க முயற்சி

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் வனப்பகுதியில் நேற்று புதிதாக 75 இடங்களில் ஏற்பட்ட காட்டுத் தீயால் 105.85 ஹெக்டேர் காடுகள் நாசமாகி உள்ளது. உத்தரகாண்ட் காடுகளில் இலையுதிர் காலம் தொடங்கி உள்ளதால் இலைகள் உதிர்ந்து சருகுகளாகின்றன. அதிக வெப்பம் காரணமாக காடுகளின் நிலமும் நீரின்றி வறண்டு காணப்படுகிறது. அதிக வெப்பத்தினால் காய்ந்த சருகுகள் உரசி தீப்பிடிக்கிறது. காடுகளில் காற்று அதிகமாக வீசுவதால் இந்த தீயானது மிக வேகமாக பல பகுதிகளுக்கு பரவுகிறது. இம்மாதத்தில் நடந்த 414 காட்டுத்தீ சம்பவங்களால் மட்டும், பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான 380 ஹெக்டேர் காடுகளை சேர்த்து, 645.3 ஹெக்டேர் பரப்பளவு காடு தீயினால் கருகி போயுள்ளது.

முதல்வர் தீரத் சிங் ராவத், மத்திய அரசின் உதவியை நாடியதை அடுத்து, குமாயோன், கர்வால் பகுதிகளில் தீயை அணைக்க 2 எம்ஐ-17 ரக போர் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பவுரி, தெக்ரி, டேராடூன், சாமோலி, ருத்ரபியாக், நைனிடால், அல்மோரா ஆகிய 7 மாவட்டங்கள் வழக்கமாக காட்டுத் தீயால் அதிகம் பாதிக்கின்றன. இந்நிலையில், நேற்று புதிதாக 75 புதிய பகுதிகளில் காட்டுத்தீ பரவியதில், 105.85 ஹெக்டேர் காடு நாசமானது. 12 ஆயிரம் வன ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலமாக 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய பக்கெட்டுகள் மூலம் ஸ்ரீகாட் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வரப்பட்டு தீயை அணைக்க முயற்சிக்கப்படுகிறது.

20 ஆண்டுகளில் 48 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் நாசம்

* உத்தரகாண்ட் மாநிலத்தில் 38,000 சதுர கிமீ பரப்பளவு காடுகள் உள்ளன.

* இது, இந்த மாநிலத்தின் நிலப்பரப்பில் 71 சதவீதமாக இருக்கிறது.

* கடந்த 2000ம் ஆண்டு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டதில் இருந்து, உத்தரகாண்ட்டில் இதுவரை 48,000 ஹெக்டேர் பரப்பளவு காடுகள் காட்டுத்தீயால் நாசமாகி உள்ளது.

* இந்தாண்டு மட்டும் 2 வன அதிகாரிகள் உள்பட 4 பேர் தீக்கிரையாகி உள்ளனர்.

Related Stories: