2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலைவிட 2021 சட்டப்பேரவை தேர்தலில் வாக்கு சதவீதம் அதிகரிப்பு: தேர்தல் புள்ளிவிவரத்தில் தகவல்

சென்னை: தமிழகத்தில் 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலைவிட தற்போது நடந்து முடிந்துள்ள சட்டமன்ற தேர்தலில் ஒரு சதவீதம் வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 234 சட்டமன்ற தொகுதிக்கும் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 72.78 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. இது கடந்த சட்டமன்ற தேர்தலை விட அதாவது 2016ம் ஆண்டு தேர்தலை விட 2 சதவீதம் குறைவு ஆகும். 2016ம் ஆண்டு 74.24 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. அதே நேரம் கடந்த 2019ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் மக்களவை பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.

அப்போது 38 மக்களவை தொகுதிக்கும், 18 சட்டமன்றத்துக்கான இடைத்தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் 38 மக்களவைக்கான தேர்தலில் ஒட்டுமொத்தமாக 71.87 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது. இது நேற்று முன்தினம் நடந்த சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளைவிட ஒரு சதவீதம் குறைவு ஆகும். அப்போதும் மக்களவை தேர்தலின்போது குறைந்த அளவே வாக்குகள் பதிவாகி இருந்தது. தென் சென்னையில் 56.41 சதவீதமும், மத்திய சென்னையில் 59.25 சதவீதம் வாக்குகள் பதிவானது. அதே நேரம் 2019ம் ஆண்டு நடைபெற்ற 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 75.56 சதவீதம் வாக்குகள் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: