குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4% என்பதில் மாற்றமில்லை!: ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு..!!

மும்பை: வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் என்பதில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 4 சதவீதம் என்பதிலேயே நீடிக்கிறது. மும்பையில் இருந்து காணொலி வாயிலாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், வங்கிகளுக்கான குறுகிய கால வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவீதமாக தொடரும் என்றும் இதனால்  வீடு,வாகனங்களுக்கான கடன் விகிதத்தில் மாற்றம் ஏதும் இருக்காது என்றும் தெரிவித்தார். ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதமும் 3.35 சதவீதமாகவே தொடரும் என்றும் கூறினார். 2021- 2022ம் நிதியாண்டிற்கான நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 10.5 சதவீதமாக இருக்கும் என்றும் ஆளுநர் சக்தி காந்த தாஸ் குறிப்பிட்டார்.

ஏப்ரல் - ஜூன் காலாண்டில் 26.2 சதவீதமாகவும், ஜூலை - செப்டம்பர் காலாண்டில் 8.3 சதவீதமாகவும், அக்டோபர் - டிசம்பர் காலாண்டில் 5.4 சதவீதமாகவும், ஜனவரி - மார்ச் காலாண்டில் 6.2 சதவீதமாகவும் வளர்ச்சி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சந்தைகளில் போதுமான பணப்புழக்கம் நிலவும் வகையில் ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுக்கும். மேலும் கொரோனா அதிகரிப்பால் மாநில  அரசுகள் விதிக்கும் கட்டுப்பாடுகளால் உள்நாட்டு வளர்ச்சியில் மாற்றமிருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் தெரிவித்தார். இதற்கு முன்னர் ராய்டர்ஸ் நிறுவனம் சார்பாக நடத்தப்பட்ட ஆய்விலும் ரெப்போ விகிதத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்று வல்லுநர்கள் தெரிவித்திருந்தனர். அதேபோலவே இன்றைய கூட்டத்தில் ரெப்போ விகிதத்தில் மாற்றம் செய்யாமல் 4 சதவீதமாகவே நீடிக்கும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: