காவல்துறை மீது குற்றச்சாட்டு இல்லாத அளவிற்கு வழக்கு விசாரணையை நியாயமாக நடத்த வேண்டும்-போலீசாருக்கு எஸ்பி அறிவுறுத்தல்

திருப்பதி : விசாரணையை நியாயமாக நடத்த வேண்டும் என்று போலீசாருக்கு எஸ்பி வெங்கட அப்பல நாயுடு உத்தரவிட்டுள்ளார்.

திருப்பதி காவல்துறையினருக்கு குற்ற நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைக் கூட்டம்  பத்மாவதி மகளிர் பல்கலைக்கழக அரங்கில் திருப்பதி எஸ்பி வெங்கட அப்பல நாயுடு தலைமையில் நேற்று நடந்தது.

இதில், கூடுதல் எஸ்பி சுப்ரஜா, திருமலை கூடுதல் எஸ்பி முனி ராமையா, டிஎஸ்பிக்கள்,  இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், எஸ்பி வெங்கட அப்பல நாயுடு பேசியதாவது: புகார் அளிக்கும் நபரிடம் முறையாக விவரங்களை கேட்டறிந்து அவர்களுக்கு உரிய பதிலை சரியான முறையில் அளித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நியாயமாக நடத்த வேண்டும். காவல்துறையின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டுகளும் இல்லாத அளவிற்கு நடந்து கொள்ள வேண்டும்.

காவல் நிலையங்களில் வழக்கு விசாரணைகளை நிலுவை வைக்காமல் துரிதமாகவும் சரியாகவும் நடத்த வேண்டும். மேலும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் காலை மாலை நேரங்களில் ரோந்து பணிகளில் ஈடுபட வேண்டும். சாலைகளில் அடிக்கடி விபத்துகள் நடக்கும் பகுதிகளை ஆய்வு செய்து அங்கு ஒளிரும் பலகைகள் அமைத்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். நடைபெற உள்ள ஜில்லா பரிஷத் தேர்தல்களில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

தேர்தல் நடைமுறைகளை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். வாக்காளர்களுக்கு மது பணம் வழங்குவது உள்ளிட்ட சம்பவங்களை தடுக்க சிறப்பு போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறிந்து அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் அமைதியாகவும், நியாயமாகவும் நடக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: