ஆரணி சட்டமன்ற தொகுதியில் மை இல்லாமல் 2 மணிநேரம் காத்திருந்த வாக்காளர்கள்-ஒரே குடும்பத்தில் 4 பேர் பெயர் நீக்கம்

ஆரணி : தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தல் நேற்று நடைபெற்றது. அதன்படி, ஆரணி சட்டமன்ற தொகுதியில் இளைஞர்கள், பொதுமக்கள்  நேற்று ஆர்வத்துடன் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். ஆரணி சட்டமன்ற தொகுதியில் 386 வாக்குசாவடி மையங்கள்  உள்ளது. இதில்  2,76,092 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், தேர்தல் பணியில் 1,942 ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டனர்.    ஆரணி  சட்டமன்ற  தொகுதியில் நேற்று காலை பூத் ஏஜென்டுகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, காலை  7 மணி அளவில் வாக்குப்பதிவு தொடங்கியது.    

 

அப்போது, வாக்காளர்களுக்கு கிருமிநாசினி, முகக்கவசம், கையுறை வழங்கப்பட்டு சமூக இடைவெளியை கடைபித்து வாக்களிக்க சுகாதார பணியாளர்கள் கூறினர். கொரோனா தடுப்பு நடவடிக்கை பின்பற்றப்பட்ட பிறகே வாக்காளர்கள்  வாக்குப்பதிவு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்த 11 ஆவணங்களில்  ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களித்து சென்றனர்.    

இந்நிலையில், ஆரணி நகராட்சிக்குட்பட்ட சைதாப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளியில் வார்டு 27,28 உள்ளிட்ட 5 வார்டுகளில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு மையம் அமைத்திருந்தனர். அதில், 2  வாக்குச்சாவடி மையம் அமைக்க போதிய இடம்  இல்லாததால்,  பள்ளியின் அருகே திறந்த மைதானத்தில் தற்காலிகமாக டெண்ட் அமைத்து, 162, 162ஏ வாக்குச்சாவடி மையங்கள் போதிய பாதுகாப்பு இல்லாமல் அமைக்கப்பட்டிருந்தது.

இதனால் வாக்குசாவடி மையங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் மின்னணு இயந்திரங்கள் வைக்கவும் பாதுகாக்கவும்  தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட மறுத்தனர். பின்னர், இதுதொடர்பாக தேர்தல் நடத்தும் அலுவலர் ஆர்டிஓ பூங்கொடி மற்றும் கலெக்டரிடமும் புகார் தெரிவித்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் காலை வாக்குப்பதிவு மையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க வந்ததால் வேறு வழியின்றி, தற்காலிக மையங்களிலேயே வாக்குப்பதிவு செய்யும் பணிகள் தொடங்கியது.    

மேலும், ஆரணி சைதாப்பேட்டை தர்மராஜா கோயில் தெருவில் உள்ள வார்டு 28 வசித்துவரும், ஒரே குடும்பத்தை சேர்ந்த  சண்முகம்(75), பார்வையற்றவர், இவரது மனைவி பச்சையம்மாள்(58), மகள்கள் சுமதி(35), திருநீற்றுநாயகி(28) ஆகியோர் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதே வார்டுகளில் வாக்களித்திருந்தனர்.

இதையடுத்து நேற்று நடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க அனந்தபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளிக்கு ஆர்வத்துடன் வந்தனர். ஆனால், வாக்காளர் பட்டியலில் அவர்கள் 4 பேரின் பெயர்களும் நீக்கப்பட்டுள்ளதாக வாக்குச்சாவடி அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், அதிர்ச்சியடைந்த அவர்கள் வாக்குச்சாவடி மையத்தில் எங்கள் அனுமதியில்லாமல் யார் பெயரை நீக்கியது என அதிகாரிகளிடம் வாக்குவாத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு போனில் தொடர்பு கொண்டும், போன் எடுக்காததால், போலீசார் அவர்களை வாக்குச்சாவடி மையத்தை விட்டு வெளியேற்றினர். இதையடுத்து அவர்கள் பள்ளி அருகே நீண்டநேரம் காத்திருந்து வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

மேலும் பதற்றமான வாக்குச்சாவடி மையங்களில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. இதனால் வாக்குச்சாவடி மையங்களில் எவ்வித பிரச்னைகளும் இல்லாமல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.    மேலும், ஆரணி சட்டமன்ற தொகுதியில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஏடிஎஸ்பி சுந்தரமூர்த்தி, டிஎஸ்பிக்கள் கோட்டீஸ்வரன், முரளிசுந்தரம், பாபு ஆகியோர் தலைமையில் 10 இன்ஸ்பெக்டர்கள், 156 போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் 80 பேரும், ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் 100 பேர் என மொத்தம் 350 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் ஆரணி சைதாப்பேட்டை, அனந்தபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்தில் ஏராளமான வாக்காளர்கள் வாக்களிக்க நீண்ட வரிசையில் காத்திருந்தனர். அப்போது, வாக்காளர்களுக்கு வைக்கும் மை தீர்ந்து போனதால் மதியம் 12 முதல் 2 மணி வரை  மை வரும் வரை வாக்களிக்க நீண்ட நேரம் வாக்காளர்கள் காத்திருந்தனர்.

அதேபோல், உணவு இடைவேளை இல்லாமல் இரவு 7 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே பள்ளியில் உணவிற்காகவும், வாக்குப்பதிவு 1 மணி நேரம் நிறுத்தப்பட்டது. இதனால், வாக்காளர்கள், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அலுவலர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல், ஆரணி தொகுதியில் பல்வேறு பகுதியில் மை இல்லாமல் பல மணி நேரம் காத்திருந்து வாக்காளர்கள் வாக்களித்து சென்றனர்.

Related Stories: