சென்னையின் 16 தொகுதிகளிலும் முன்னேற்பாடுகள் நிறைவு தயார் நிலையில் வாக்குச்சாவடிகள்: மாவட்ட தேர்தல் அதிகாரி அறிவிப்பு

சென்னை: சென்னை மாவட்டத்தின் 16 சட்டமன்ற தொகுதிகளிலும் தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் நிறைவுபெற்று வாக்குப்பதிவுக்கு தயார்நிலையில் உள்ளது. ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் தேவையான பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர், ஆணையர் பிரகாஷ் கூறினார். இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அட்டவணைப்படி தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல்-2021ம் ஆண்டிற்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற உள்ளது. சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளில் 1,061 இடங்களில் 5,911 வாக்குச்சாவடி மையங்கள் அமைந்துள்ளன.

இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவு நாளன்று பணிபுரிய 28,372 மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டு ஏற்கனவே மூன்றுகட்ட பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. மேற்படி பணியாளர்கள் பணிபுரிய வேண்டிய வாக்குச்சாவடி எண் அடங்கிய இறுதி ஆணை இந்திய தேர்தல் ஆணைய பொதுப் பார்வையாளர் முன்னிலையில் தயார் செய்யப்பட்டு நேற்று சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் இருந்து அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், வாக்குச்சாவடி மையம் குறித்த தகவல் அனைத்து வாக்குச்சாவடி அலுவலர்களுக்கும் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டுள்ளது.  

சென்னை மாவட்டத்தில் 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான 14,276 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 7,095 கட்டுப்பாட்டு கருவிகள், 7,984 யாருக்கு வாக்களித்தோம் என்பதனை உறுதிசெய்யும் இயந்திரங்கள் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் கணினி குலுக்கல் முறையில் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிகளுக்கு பல்வேறு கட்டங்களாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவிற்கு தேவையான இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியின் பாதுகாப்பு அறைகளிலிருந்து 423 வாக்குப்பதிவு மண்டல அலுவலர்கள் மூலமாக சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு காவலர்கள் பாதுகாப்புடன் எடுத்துச் செல்லும் பணி அந்தந்த தொகுதியின் தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.

மேலும் கொரோனா பெருந்தொற்றை முன்னிட்டு, இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி மையங்களில் பல்வேறு விதமான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தொடாவெப்பநிலைமானி மூலம் வாக்காளர்களை பரிசோதிக்கவும், வாக்காளர்கள் கைகளை முறையாக சானிடைசர் கொண்டு சுத்தம் செய்வதை உறுதி செய்யவும் ஒரு வாக்குச்சாவடிக்கு இரண்டு சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வாக்களிக்க வரும் வாக்காளர்களுக்கு வலது கையில் அணிந்து கொள்ள பாலித்தீன் கையுறைகள் வாக்குச்சாவடியில் பணியில் உள்ள அலுவலர்களுக்கு கைகளை சுத்தம் செய்ய தனியே சானிடைசர்கள், முகக்கவசங்கள்  மற்றும் சர்ஜிகல் முகக்கவசம் , ரப்பர் கையுறை வழங்கப்படும். மேலும், வாக்காளர்களின் உடல் வெப்பநிலை சராசரிக்கு மிக அதிகமாக இருந்தாலும், கோவிட் வைரஸ் தொற்றின் பாதிப்பு இருந்தாலும், தனிமைப்படுத்தப்பட்டு இருந்தாலும் அவர்களுக்கு மாலை 6மணி முதல் 7 மணி வரையில் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டு, வாக்காளர்களுக்கும், வாக்குச்சாவடியில் உள்ள அலுவலர்களுக்கும் முழு பாதுகாப்பு கவச உடை போன்ற கோவிட் வைரஸ் தொற்று தடுப்பிற்கான 13 வகையான பொருட்கள் தனியே ஒரு அட்டைப்பெட்டியில் வழங்கப்பட உள்ளது.

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பொதுசுகாதாரத்துறை மூலமாக நேற்று மாலை மற்றும் இன்று கிருமிநாசினிகள் தெளிக்கப்படும். வாக்குச்சாவடிக்கு வரும் அனைத்து வாக்காளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்காளர்கள் மற்றும் வாக்குச்சாவடி அலுவலர்கள் பயன்படுத்திய கையுறை, பிபி கிட் போன்ற மருத்துவக் கழிவுகளை சேகரிக்க 6,000 மஞ்சள் நிறப் பையுடன் 70 லிட்டர் கொள்ளளவு கொண்ட குப்பைத் தொட்டிகள் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க வசதியாக சாய்வுதளம் வசதி, சக்கர நாற்காலி, கழிவறை, குடிநீர் வசதி, சாமியானா பந்தல் வசதி, இருக்கை வசதி ஆகியவை செய்யப்பட்டுள்ளன. 1061 வாக்குச்சாவடி அமைவிடங்களில் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிபுரிய 1061 தன்னார்வலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஒவ்வொரு தொகுதியிலும் முழுவதுமாக மகளிர் வாக்குச்சாவடி அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டு சிறப்பு ஏற்பாடுகளுடன் கூடிய வாக்குச்சாவடி ஒன்றும், மாதிரி வாக்குச்சாவடி நான்கும் அமைக்கப்பட்டுள்ளது. 30 மிகவும் பதற்றமான வாக்குச்சாவடிகள், 577 பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் 2467 இதர வாக்குச்சாவடிகள் என மொத்தம் 3074 வாக்குச்சாவடிகள் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பதற்றமான, மிகவும் பதற்றமான 607 வாக்குச்சாவடிகளில்  நுண் பார்வையாளர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.  

மேலும், இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் தங்களுடைய வாக்குச்சாவடி நிலையம் அமைந்துள்ள இடம், வரிசை எண், பாகம் எண் தொடர்பாக விவரங்களை தெரிந்து கொள்ள உதவி மையம் என்கின்ற அலைபேசி செயலியினை அறிமுகப்படுத்தியுள்ளது.  வாக்காளர்கள் இந்தச் செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண்ணை உள்ளீடு செய்து தங்கள் வாக்குப்பதிவு நிலையம் மற்றும் இதர விவரங்கள் தொடர்பாக அறிந்து கொள்ளலாம்.  சென்னையில் உள்ள வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மூலமாக வாக்காளர் அடையாள சீட்டு வழங்கப்பட்டுள்ளது.  

வாக்காளர் அடையாள சீட்டு கொண்டு வர இயலாத நபர்கள் வாக்குச்சாவடியில் உள்ள நிலைய அலுவலரை அணுகி தங்களது வாக்குச்சாவடி மற்றும் இதர தகவல்களை தெரிந்து கொள்ளலாம். எனவே, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள அனைத்து அரசு ஊழியர்களும் அவரது கடமையிலிருந்து மீறாமல் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். வாக்காளர்கள் வாக்குப்பதிவு நாளான இன்று தங்களுடைய வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்கினை பதிவு செய்து ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

* 12 ஆவணங்களில் வாக்களிக்கலாம்

வாக்காளர்கள் கீழ்க்கண்ட 12 ஆவணங்களின் மூலம் தங்களது வாக்குகளை செலுத்தலாம் வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, கடவுச்சீட்டு, ஒட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் வரையறுக்கப்பட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள் (புகைப்படத்துடன் கூடிய), நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஒய்வூதிய ஆவணம், பாராளுமன்ற, சட்டமன்ற, சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகியவை ஆகும்.

Related Stories: