டயர் வெடித்ததால் விபரீதம்: லாரி மீது கார் மோதல் பெண் தலைமை காவலர் பலி

கே.வி.குப்பம்: வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாலதி(45). இவர் வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் தலைமை பெண் காவலராக பணியாற்றி வந்தார். இந்நிலையில், மாலதி கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவில் இடம் பெற்றிருந்தார். நேற்றிரவு கே.வி.குப்பம் அடுத்த பி.கே.புரம் அருகே மாலதி மற்றும் தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் சென்ற காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், எதிர்பாராதவிதமாக அவ்வழியாக வந்த லாரி மீது மோதியது. அப்போது கார் அப்பளம் ெநாறுங்கி, அதிலிருந்த தேர்தல் நிலை கண்காணிப்பு குழுவினர் படுகாயமடைந்தனர்.

மேலும், பெண் தலைமை காவலர் மாலதியும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த அப்பகுதியினர் அதிர்ச்சியடைந்து படுகாயமடைந்தவர்களை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவலறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து தலைமை பெண் காவலர் மாலதியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: