பிரசாரத்துக்கு ஓபிஎஸ், இபிஎஸ் வரவில்லை புதுச்சேரி அதிமுக வேட்பாளர்களை கண்டுகொள்ளாத கட்சி தலைமை

புதுச்சேரியில் ஓபிஎஸ், இபிஎஸ் பிரசாரத்துக்கு வராததால் அதிமுக வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் சோர்வடைந்துள்ளனர். புதுச்சேரியில் தேஜ கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு நான்கு சிட்டிங் எம்எல்ஏ உள்ள நிலையில் வெறும் 5 தொகுதிகளை மட்டும் பாஜ ஒதுக்கியது. அதுமட்டுமல்லாமல் மாநில செயலாளரான ஓம்சக்தி சேகர் தொடர்ந்து போட்டியிட்டு வந்த நெல்லித்தோப்பு தொகுதியையும் பாஜ தன்வசப்படுத்திக்கொண்டதால் அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் கடும் கொந்தளிப்புடன் இருந்து வந்தனர். தேஜ கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்காததால் பாஜ மீது கடும் அதிருப்தியில் இருந்து வரும் ரங்கசாமி, தனது கட்சியை மட்டும் கரைசேர்க்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.

இதனால் பாஜ, அதிமுக போட்டியிடும் தொகுதிகளில் அவர் பிரசாரம் செய்யவில்லை. அவரது கட்சி நிர்வாகிகளில் ஒரு சிலர் மட்டுமே கூட்டணி கட்சிகளுடன் ஓட்டுகேட்க செல்கின்றனர். அதேபோல் புதுச்சேரியில் முகாமிட்டு பிரசாரம் செய்து வரும் பாஜ தலைவர்களும் தங்கள் கட்சியினர் போட்டியிடும் தொகுதிகளில் மட்டுமே பிரசாரம் செய்தனர். அதிமுக போட்டியிடும் தொகுதிகளை அவர்கள் எட்டிக்கூட பார்க்கவில்லை.புதுச்சேரியில் உப்பளம், முதலியார்பேட்டை, முத்தியால்பேட்டை, உருளையன்பேட்டை மட்டுமின்றி காரைக்கால் தெற்கு என 5 தொகுதியில் அதிமுக வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 4 பேர் சிட்டிங் எம்எல்ஏக்கள் ஆவர். இவர்களை ஆதரித்து அதிமுக தலைமையான ஓபிஎஸ், இபிஎஸ் பிரசாரத்துக்கு புதுச்சேரி வரவில்லை.

எந்தவொரு அதிமுக விஐபியோ அல்லது தலைமைக்கழக பேச்சாளர்களோ புதுச்சேரிக்கு வரவில்லை. இதனால் வேட்பாளர்கள் தங்களது சொந்த பலம், ஆதரவாளர்களை மட்டுமே நம்பி பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக ஜெயலலிதா இருந்தபோது ஒவ்வொரு முறையும் புதுச்சேரி மாநிலத்துக்கு நேரம் ஒதுக்கி பிரசாரம் செய்வார். ஆனால் தமிழக தலைவர்கள் யாருமே புதுச்சேரி பக்கம் தலைகாட்டாதது அதிமுக தொண்டர்களை சோர்வடைய செய்துள்ளது.

Related Stories: