சந்நியாசி தீட்சை பெற்ற மாஜி காங். எம்எல்ஏ: ஆந்திர அரசியலில் பரபரப்பு

ராஜாமகேந்த்ரவரம்: ஆந்திராவை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ சிவராம கிருஷ்ண ராவ், சந்நியாசி தீட்சை பெற்றுக் கொண்டு துறவற வாழ்க்கையை மேற்கொண்டுள்ளார். ஆந்திர மாநிலத்தை சேர்ந்த முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ சிவராம கிருஷ்ணராவ் (83), அனைத்து சுகங்களையும், உலக இன்பத்தையும் துறந்து சந்நியாசியாக மாறிவிட்டார். அவருக்கு, கோதாவரி ஆற்றின் ராஜமகேந்திரவரம் ஆற்றங் கரையின் புஷ்கர் படித்துறையில் சந்நியாச தீட்சை அளிக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த தீட்சை சடங்கில், முன்னாள் டிஜிபி அரவிந்த் ராவ், முன்னாள் எம்பி அருண்குமார் ஆகிேயாரும் கலந்து கொண்டனர்.

சந்நியாசியாக மாறிய சிவராம கிருஷ்ணராவ் கடந்த 1978 மற்றும் 1989ம் ஆண்டுகளில், ஒருங்கிணைந்த ஆந்திர சட்டப்பேரவையில் கடப்பா மாவட்டத்தில் உள்ள பத்வெல் சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது சந்நியாச தீட்சை பெற்ற பிறகு, தனது பெயரை சுவாமி சிவராம ஆனந்த சரஸ்வதி என்று மாற்றிக் கொண்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் உண்மையான வாழ்க்கை வாழ விரும்புகிறேன். அதற்காக இப்போது சந்நியாச பாதையில் தேர்வு செய்து பயணிக்க உள்ளேன். இந்த பாதையில் செல்வதால் நான் மகிழ்ச்சியடைகிறேன். எனது நலம் விரும்பிகளான முன்னாள் டிஜிபி அரவிந்த் ராவ், மற்றும் முன்னாள் எம்பி அருண்குமார் ஆகியோர் எனது தீட்சை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்’ என்றார்.

Related Stories: