தினசரி தொடரும் ஆபத்து பயணம்; விதி மீறி பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள்: அரூர் பகுதி மக்கள் பீதி

அரூர்: அரூர் பகுதியில் விதி மீறி அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகளால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். ஆந்திரா, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் மற்றும் சென்னை, வேலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு பாரம் ஏற்றிக்கொண்டு வரும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் டோல்கேட் கட்டணம் செலுத்துவதை தவிர்க்க தர்மபுரி மாவட்டத்தில் நுழையும்போது பைபாஸ் சாலையை தவிர்த்து, அரூர் வழியாக செல்வது வாடிக்கையாக உள்ளது. லாரிகளில் குறிப்பிட்ட அளவு பாரத்தை மட்டுமே ஏற்றி செல்ல அனுமதிக்கப்படுகிறது.

அவ்வாறின்றி ஒரு சில நேரங்களில் நேரம் மற்றும் செலவை மிச்சப்படுத்தும் நோக்கில் அளவிற்கு அதிகமான பாரம் ஏற்றப்படுகிறது .இதனால், லாரிகளில் பாரம் ஒருபுறமாக சாய்ந்து விபத்துகள் நிகழ்கிறது. இதுபோன்ற சமயங்களில் பக்கவாட்டில் செல்லும் வாகனங்களில் மோதியோ, பாரம் தாங்காமல் சாய்ந்து விழுந்தாலோ பெரிய அளவிலான விபத்துக்கள் நிகழ நேரிடும். அரூர் பைபாபஸ் சாலையில் அளவிற்கு மீறி டயர் ஏற்றி செல்லும் லாரியிலிருந்து எப்போது பாரம் கீழே விழுமோ என்ற பயத்தில் பின்னால் வரும் வாகன ஓட்டிகள் பயந்து பயணம் செய்யும் நிலை காணப்படுகிறது. எனவே இது போன்று அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை அதிகாரிகள் பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: