யானைகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வன எல்லையோர கிராமங்களில் பலாப்பழங்கள் பறிக்கும் பணி துவக்கம்: வனத்துறையினர் நடவடிக்கை

கூடலூர்: கூடலூர் பந்தலூர் பகுதிகளில் வன எல்லைகளில் உள்ள கிராமங்களில் அடிக்கடி காட்டு யானைகள் நுழைந்து பொது மக்களின் உயிர் மற்றும் உடைமைகளுக்கு சேதம் விளைவித்து வருவதோடு விவசாய பயிர்களையும் சேதப்படுத்தி வருகிறது. தற்போது வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதாலும் பசுந்தீவனங்கள் தட்டுப்பாடு காரணமாகவும் வனஎல்லையோரம் உள்ள கிராமப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களை நோக்கி காட்டு யானைகள் வருவது அதிகரித்து உள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன் உப்பட்டி பெருங்கரை பகுதியில் காட்டு யானை தாக்கி இருவர் உயிரிழந்தனர். இதேபோல் முதுமலை வன எல்லையை ஒட்டிய போஸ்பாரா, கர்கப்பாளி, நெல்லிக்கரை,

குனில் வயல் மற்றும் கோக்கால் பகுதிகளிலும் ஆங்காங்கே அகழிகளைத் தாண்டி காட்டு யானைகள் ஊருக்குள் வர துவங்கியுள்ளன. குறிப்பாக பலாப்பழ சீசன் தற்போது துவங்கியுள்ளதால் பலா மரங்கள் இருக்கும் இடங்களைத்  தேடி காட்டு யானைகள் அந்தந்த பகுதிக்கு வருவது வழக்கம். இதைத் தடுக்கும் வகையில் பலா மரங்களில் உள்ள பலாக்காய் மற்றும் பழங்களை  வெட்டி அகற்றும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். வன எல்லைகளை ஒட்டி யானைகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் வசிக்கும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் உள்ள பலா மரங்களில் பலாக் காய்களை தாங்களாகவே வெட்டி அகற்றிடவும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: