தேர்தல் பணியாற்றும் அலுவலர்களுக்கு காற்றோட்டமான வகுப்பறை, தங்குமிடம், குடிநீர் வசதியுடன் தயாரான வாக்குச்சாவடி மையம்: முத்துப்பேட்டை அருகே அரசு பள்ளி ஆசிரியர்கள் அசத்தல்

முத்துப்பேட்டை: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த தில்லைவிளாகம் கிழக்கு பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 140க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு பணியில் இருக்கும் ஆசிரியர்களின் தீவிர அர்ப்பணிப்பு பணிகளால் இங்கு படிக்கும் மாணவர்கள் பலர் ஆர்வத்துடன் படித்து பல்வேறு பாராட்டுகளை பெற்று உள்ளனர்.அதேபோல் மாநில, மாவட்ட, வட்டார அளவிலான பல்வேறு போட்டிகளில் கலந்துக்கொண்டு சிறப்புகளும் பெற்றுள்ளனர் . தற்பொழுது தமிழக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்த பள்ளியிலும் ஒரு வாக்கு சாவடி இயங்க உள்ளது.

இதனை அறிந்த ஆசிரியர்கள் வாக்குச்சாவடி அமைய உள்ள வகுப்பறையை சொந்த முயற்சியில் சுத்தம் செய்து டைல்ஸ் போட்டு பளபளக்கும் வகையில் மின்ன வைத்துள்ளனர்.இதில் புதிய மின் விசிறிகள் அமைத்து காற்றோட்டமான வகுப்பறையாகவும், தடுமாற்றம் இல்லாத வகையில் புதிய ஒயர்கள் அமைத்து மின்சார வசதி, சீரமைக்கப்பட்ட கழிப்பறை, தங்குமிடம், குடிநீர் தளவாடப் பொருட்கள் என அனைத்து வசதிகளுடன் கூடிய வாக்குச்சாவடியாக மாற்றி அமைத்துள்ளனர். தில்லைவிளாகம் அரசு பள்ளி நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு பணிகளை கண்டு இப்பகுதி தேர்தல் அலுவலர்களே அசந்துபோய் உள்ளனர்.

இதுகுறித்து பள்ளியின் ஆசிரியர் சரவணன் கூறுகையில், வாக்குச்சாவடி மையத்தில் பணியாற்ற வருகைதரும் அலுவலர்களுக்கு காற்றோட்டமான வகுப்பறை, மின்சார வசதி, கழிப்பறை, தங்குமிடம், குடிநீர் தளவாடப் பொருட்கள் ஆகியவற்றுடன் கூடிய வாக்குச்சாவடி பகுதியை நாங்கள் தயார்படுத்தி உள்ளோம். இந்த பணியை எங்களின் கடமையாகவும் கருதுகிறோம் என்றார்.

Related Stories: