வலங்கைமான் குடமுருட்டி ஆற்றின் கரையில் இடிந்து விழும் நிலையில் மயான கொட்டகை: அச்சத்துடன் அடக்கம் செய்யும் மக்கள்

வலங்கைமான்: வலங்கைமான் பேரூராட்சி பகுதிகள் மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள மயான கொட்டகையை அப்புறப்படுத்தி விட்டு புதிய கொட்டகை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இப்பகுதிகளில் சுமார் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளில் வசிப்போர் எதிர்பாராதவிதமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களை அடக்கம் செய்யும் வகையில் தில்லையம்பூர் பாலம் அருகே சுடுகாடு கொட்டைகள் மற்றும் ஈமக்கிரியை மண்டபம் உள்ளன. இவைகள் கடந்த திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது.

இந்த மயான கொட்டைகளை சுற்றி சுற்றுச்சுவர் அமைக்கப்பட்டது. தண்ணீர் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது.அதேபோல் சுள்ளன் ஆற்றின் கரை பகுதியில் மயான கொட்டகை உள்ளது. இருப்பினும் வலங்கைமான் பேரூராட்சிக்கு உட்பட்ட நாடு நாகரசம் ரோட்டிற்கு கிழக்கே உள்ள கீழத்தெரு வடக்கு அக்ரஹாரம், தெற்கு அக்ரஹாரம், நடு அக்ரஹாரம் எல்லையம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சார்ந்த இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சார்ந்தவர்கள் உயிரிழக்க நேரிட்டால் அவர்களை அடக்கம் செய்யும் விதமாக குடமுருட்டி ஆற்றின் கரையில் அருகே மயான கொட்டகை ஒன்று உள்ளது.

இது சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகும் மயான கொட்டகை முற்றிலும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ளது. இறந்தவர்களை அடக்கம் செய்யும் செல்லும் உறவினர்கள் அச்சத்துடனே அங்கு அடக்கம் செய்யும் பணியை மேற்கொள்ள வேண்டிய சூழல் உள்ளது. மேலும் இந்த மயான கொட்டகைக்கு தண்ணீர் வசதியும் இல்லை. தற்போது மயான கொட்டகை அருகே போர்வெல் போடப்பட்டு அதில் பம்புகள் பொருத்தப் படாததால் தண்ணீர் வசதி இல்லாமல் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளது. எனவே பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் விதமாக உள்ள மயான கொட்டகையினை அப்புறப்படுத்திவிட்டு புதிய மயான கொட்டகை அமைத்து தரவேண்டும் எனவும்,

இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்வதற்கு போதிய தண்ணீர் வசதி இல்லாத நிலையில் பல மீட்டர் தூரம் சென்று தண்ணீர் எடுத்து வர வேண்டிய நிலை உள்ளது ஆகையால்மயான கொட்டகை பகுதியில் தண்ணீர் வசதி செய்து தர வேண்டும்என பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் இதற்கு பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. எனவே பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக அனைத்து வசதிகளுடன் கூடிய மயான கொட்டகை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: