குஜராத்தை போல மேற்கு வங்கத்தை மாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்: மம்தா பானர்ஜி ஆவேசம்..!

கொல்கத்தா: உ.பி., பீகாரிலிருந்து குண்டர்களை கொண்டு வந்து மேற்கு வங்கத்தை கைப்பற்ற குஜராத்திகள் முயற்சி செய்கின்றனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் முதல் இரண்டு கட்ட சட்டசபை தேர்தல் முடிவுற்ற நிலையில், மூன்றாவது கட்ட தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. 8 கட்ட வாக்குப்பதிவு முடிந்து வரும் மே 2ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இன்னமும் 6 கட்டத் தேர்தல்கள் நடைபெற உள்ளது. இந்நிலையில் மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும், பாஜகவுக்கும் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இதற்கான பிரசாரத்தில் பாஜ தலைவர்களும், பிரதமர் மோடியும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல், 3வது முறையாக ஆட்சியை தக்கவைப்பதற்காக திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி அடிப்பட்ட காலுடன் வீல்சேரில் சென்று பிரசாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஹவுரா மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி; உ.பி., பீகாரிலிருந்து குண்டர்களை கொண்டு வந்து மேற்கு வங்கத்தை கைப்பற்ற குஜராத்திகள் முயற்சி செய்கின்றனர். குஜராத்தை போல மேற்கு வங்கத்தை மாற்ற ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். விவசாயிகளுக்கு அதிக நிதியுதவி வழங்க பேச்சு நடத்துவதாக கூறி வருகின்றனர்.

விவசாயிகளுக்கு உதவுவதாக வசனம் பேசும் பாஜக, நான் பயனாளிகள் பட்டியல் அனுப்பியும் பணம் தராதது ஏன்? மோடியும், அமித்ஷாவும் நெருங்கிய கூட்டாளிகள். அபிஷேக்கின் வீடு, சுதீப்பின் வீடு மற்றும் ஸ்டாலினின் மகளின் வீடுகளில் சோதனை நடத்த மத்திய அரசு முகமைகளை அனுப்புகிறார்கள். பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் மேற்கு வங்கத்தில் போலீஸ் அதிகாரிகளை அடிக்கடி மாற்றுகின்றனர். மேற்கு வங்கத்தில் வகுப்பு மோதலை உருவாக்க பாஜகவினர் முயற்சிக்கின்றனர் என குற்றம் சாடினார்.

Related Stories: