கட்டணம் செலுத்தாததால் கப்பலூர் டோல்கேட்டில் அரசு பஸ்கள் சிறைபிடிப்பு

திருமங்கலம்: கட்டணம் செலுத்தாததால் கப்பலூர் டோல்கேட்டில் அரசு பஸ்களை ஊழியர்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருமங்கலம் கப்பலூர் டோல்கேட்டில் ராஜபாளையம், சங்கரன்கோவில், செங்கோட்டை செல்லும் அரசு பஸ்களுக்கு, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சுங்க கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் ராஜபாளையம், செங்கோட்டை, வத்திராயிருப்பு செல்லும் அரசு பஸ்கள் டோல்கேட்டை புறக்கணித்து மண்டேலாநகர், ஒத்த ஆலங்குளம், விடத்தைகுளம், கற்பகம் நகர் வழியாக திருமங்கலம் வந்து சென்றன.

இந்நிலையில், கட்டணம் செலுத்தியதாக போக்குவரத்து கழகம் தெரிவித்தது. இதையடுத்து டோல்கேட் வழியாக அரசு பஸ்கள் செல்ல ஆரம்பித்தன. 60 பஸ்களுக்கு மட்டுமே கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது. மற்ற பஸ்களுக்கு செலுத்தவில்லை என கூறி நேற்றிரவு அரசு பஸ்களை டோல்கேட் ஊழியர்கள் சிறைபிடித்தனர். இதனால் அரசு பஸ்கள் நீண்டதூரம் அணிவகுத்து நின்றன. பயணிகள், டோல்கேட் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு பஸ்கள் செல்ல அனுமதித்தனர். இதையடுத்து பஸ்கள் புறப்பட்டு சென்றன.

Related Stories: