சர்மா நகர், பி.வி.காலனி பகுதிகளில் என்.ஆர்.தனபாலன் வாக்கு சேரிப்பு

பெரம்பூர்: பெரம்பூர் தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளரான பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், தினமும் மக்களை சந்தித்து, அவர்களது குறைகளை கேட்டறிந்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி நேற்று சர்மா நகர், பி.வி.காலனி, எருக்கஞ்சேரி நெடுஞ்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில்  வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், ‘அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை ரூ.2500ஆக உயர்த்தி தரப்படும். பெண்களுக்கு அரசு வேலை வய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும். பேருந்தில் பயணம் செய்யும் மகளிருக்கு 50 சதவீத கட்டண சலுகை வழங்கப்படும். அம்மா இல்லம் திட்டம் மூலம் சொந்தவீடு இல்லாதவர்களுக்கு இடம் வாங்கி வீடு கட்டித் தரப்படும்.

வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.  அரசின் இலவச கேபிள் டிவி இணைப்பு வழங்கப்படும். அனைத்து குடும்பத்திற்கும் வருடத்திற்கு 6 இலவச காஸ் சிலின்டர்கள் வழங்கப்படும். பெரம்பூர் சட்டமன்ற தொகுதியில் பொதுமக்கள் என்னிடம் கொடுத்துள்ள கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். தொகுதி வளர்ச்சிக்கு தேவையான பணிகளை விரைந்து மேற்கொள்வேன். எனவே, இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து என்னை வெற்றி பெற செய்ய வேண்டும்,’ என்றார். வாக்கு சேகரிக்கும் போது அதிமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Related Stories: