கிறிஸ்தவ ஆலயங்களில் புனித வெள்ளி கொண்டாட்டம்: நாளை நள்ளிரவு உயிர்ப்பு திருப்பலி நடக்கிறது

நாகர்கோவில்: இயேசு கிறிஸ்து சிலுவை பாடுகளை கடந்து சிலுவையில் அறையப்பட்டு, அதன்பின்னர் 3ம் நாள் உயிர்த்து எழும் பண்டிகை ஈஸ்டராக கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமசை அடுத்து உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால், ஈஸ்டர் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சாம்பல் புதன் அன்று தொடங்கி 41 நாட்கள் தவக்காலம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த தவக்காலத்தின் இறுதி வாரம் புனித வாரமாகும். இதில் குருத்தோலை ஞாயிறு, அதனை தொடர்ந்து பெரிய வியாழன், இயேசு சிலுவையில் அறைப்பட்ட பெரிய வெள்ளி ஆகியவை முக்கிய தினங்களாக அனுசரிக்கப்படுகின்றன.

இயேசுவின் திருப்பாடுகளை உருக்கமாகத் தியானிக்கும் இந்தப் புனித வாரத்தில் இறுதி மூன்று முக்கிய புனித நாளாகும். பிறர் வாழ தன்னையே வழங்குவதுதான் தெய்வீகம் என்பதை, நமக்கு உணர்த்த, இயேசு தனது ரத்தததையும் நமக்கு உணவாகத் தந்தார். இயேசு நம் மீட்புக்காக தம்மையே வழங்கியதுபோல, நம் அயலவர்களை அன்பு செய்து வாழவும் நம்மைப் பணிக்கின்றார் இயேசு சீடர்களின் பாதங்களைக் கழுவிய ஏசு தாழ்மைப் பண்பில் வளரவும், நம்மை அழைக்கின்றார். தம் மீட்புப் பணி இவ்வுலகில் தொடர்ந்து நடைபெற இயேசு பணிக்குருத்துவத்தை ஏற்படுத்தியதை புனித வியாழனன்று நினைவுகூர்கின்றோம். புனித வியாழன் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது.

புனித வியாழன் அன்று சீடர்களுக்கு இயேசு பாதம் கழுவதை நினைவு கூறும் வகையில் கோட்டார் சவேரியார் பேராலயத்தல் நேற்று மாலை 6.30 மணிக்கு பாதம் கழுவும் நிகழ்ச்சி நடந்தது. ஆயர் நசரேன் சூசை 13 பேரின் பாதங்களை கழுவினார். பின்னர் திருப்பலி நடந்தது. இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை நற்கருணை ஆராதனை நடந்தது. இயேசுகிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும், சிலுவைச் சாலையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடுகின்ற ஒரு விழா புனித வெள்ளி. இன்று புனித வெள்ளி ெகாண்டாடப்படுகிறது. இதனையொட்டி கோட்டார் சவேரியார் ஆலயத்தில் காலை 5 மணி முதல் நற்கருணை ஆராதனை தொடங்கியது.

இந்த நிகழ்ச்சி மாலை 6 மணி வரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிலுவை பாதை நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் ஆயர் நசரேன் சூசை, மறைமாவட்ட செயலர் இமானுவேல், பொருளாளர் அலோசியஸ் பென்சிகர், வட்டார குருகுல முதல்வர் மைக்கேல் ஏஞ்சலுஸ், ஆயரின் செயலர் சகாய ஆன்றனி, இளைஞர்குருமட அதிபர் பஸ்காலிஸ், கோட்டார் சவேரியார் ஆலய பங்குதந்தை ஸ்டேலின் சகாய சீலன், இணை பங்குதந்தை கிஷோர் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயத்திலும் இந்த நிகழ்வுகள் நடக்கிறது.

இதுபோல் சிஎஸ்ஐ கிறிஸ்தவ ஆலயங்களிலும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரை சிலுவைத் திருமொழி தியான நிகழ்ச்சி நடந்தது. நாகர்கோவில் சிஎஸ்ஐ ஹோம் சர்ச்சியில் நடந்த சிலுவைத்திருமொழி தியான நிகழ்ச்சியில் தலைமை போதகர் இறைஆசி வழங்கினார். கோட்டார் சவேரியார் ஆலயத்தில் நாளை(3ம் தேதி) நள்ளிரவு 11 மணிக்கு இயேசு உயிர்ப்பு திருப்பலி நடக்கிறது.

Related Stories: