லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள் மீது புகார் அளிக்க பொதுமக்கள் முன் வரவேண்டும்: எஸ்.பி. கலா கிருஷ்ணசாமி பேச்சு

தங்கவயல்: பெருகி வரும் லஞ்ச, ஊழலை ஒழிக்க, லஞ்சம் கேட்கும் அரசு அதிகாரிகள் மீது புகார் அளிக்க பொதுமக்கள் தைரியமாக முன் வர வேண்டும்” என்று மத்திய மண்டல ஏ.சி.பி.போலீஸ் எஸ்.பி.கலா கிருஷ்ணசாமி வலியுறுத்தி பேசினார். கோலார் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸ் (ஏ.சி.பி) சார்பில் பொது மக்களிடம் புகார் கேட்பது மற்றும் விழிப்புணர்வு முகாம் ராபர்ட்சன் பேட்டை ஜார்ஜ் மன்னர் அரங்கில் ‌நடந்தது. இதில் நில அபகரிப்பு, அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு உள்பட பல்வேறு புகார்களை பொதுமக்கள் வழங்கினர். புகார்களை பெற்று கொண்ட கர்நாடக மாநில மத்திய மண்டல ஏ.சி.பி. எஸ்.பி.கலா கிருஷ்ணசாமி பேசும் போது, ``லஞ்சம், ஊழலை ஒழிப்பதற்காக ஏசிபி தொடங்கப்பட்டது.

லஞ்சம் ஊழல் குறித்து விசாரணை நடத்துவது, லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை பொறி வைத்து கையும் களவுமாக பிடிப்பது , உள்பட பல்வேறு லஞ்ச ஒழிப்பு பணிகளில் ஏ.சி.பி. ஈடுபட்டு வருகிறது.  இதற்கு பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். பொது மக்களுக்கு அரசாங்கம் சார்ந்த பணிகள் லஞ்சம் இன்றி நடக்க வேண்டும் என்பதற்காக உள்ள ஏ.சி.பி.யை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். எனவே அரசு பணிகளை செய்வதற்கு லஞ்சம் கேட்கும் அதிகாரிகள் மீது புகார் அளிக்க பொதுமக்கள் தைரியமாக முன் வர வேண்டும்’’ என்றார்.  கடந்த மார்ச்  24ம் தேதி லஞ்ச ஒழிப்புத் துறை  போலீசார் தங்கவயல் நகர சபைக்கு திடீரென வந்து அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

அந்த சோதனையில் நகர சபை கமிஷனர் சர்வர் மெர்ச்சன்ட் டிடம் 38 ஆயிரம் மற்றும் மற்ற ஊழியர்களிடமிருந்தும் மொத்தம் 73 ஆயிரம் கணக்கில் வரவு வைக்காத ரொக்க பணத்தை கைப்பற்றினர். இது தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்க பட்டது என்று, ரெய்டு நடத்திய கோலார் ஏ.சி.பி. டி.எஸ்.பி.புருசோத்தமனிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு அவர் கூறும் போது, ``நகர சபை மேலதிகாரிகளுக்கு சோதனை குறித்த அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனையில் பிடிபட்ட பணம் குறித்தும் சம்மந்தப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. சட்ட விதிமுறைகளின் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது’’ என்று பதிலளித்தார்.

Related Stories: